கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை கால பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க மதுரை வழியாக தூத்துக்குடிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
விரைவில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள். கூட்ட நெரிசலை தவிர்க்க ரயில்வே சார்பில் பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தான் கர்நாடகா மாநிலம் மைசூரில் இருந்து தமிழகத்தின் தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மைசூருவில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு புத்தாண்டு விடுமுறை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. அதன்படி, இந்த ரயில் (வ.எண்.06283) மைசூருவில் இருந்து வருகிற 23 ஆம் தேதி மற்றும் 27 ஆம் தேதிகளில் மாலை 6.35 மணிக்கு புறப்பட்டு இரவு 9.15 மணிக்கு பெங்களூருவுக்கும், மறுநாள் காலை 8 மணிக்கு மதுரை ரயில் நிலையமும் வந்தடைகிறது. பகல் 11 மணிக்கு தூத்துக்குடி ரயில் நிலையம் சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் இந்த ரயில் (வ.எண்.06284) வருகிற 24 ஆம் தேதி மற்றும் 28 ஆம் தேதிகளில் தூத்துக்குடியில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு மாலை 5.20 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்தடைகிறது. மறுநாள் அதிகாலை 5.10 மணிக்கு பெங்களூருவுக்கும், காலை 7.45 மணிக்கு மைசூருவுக்கும் சென்றடைகிறது.
இந்த ரயிலில், ஒரு 2 அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். சிறப்பு ரயில் மாண்டியா, மட்டூர், சென்னபட்டணா, ராமநகரம், கெங்கேரி, பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட், ஓசூர், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, தூத்துக்குடி மேலூர் (2-ம் கேட்) ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.




