• vilasalnews@gmail.com

2023 கனமழை ரிப்பீட் ஆகுதா... பீதியில் தூத்துக்குடி மக்கள்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மூன்றாவது நாளாக கனமழை நீடித்தது. ஆறு, கால்வாய்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் சூழந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். 


தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு விடிய விடிய கனமழை பெய்தது. நேற்று பகலில் மழை சற்று குறைந்திருந்தது. தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.


கோரம்பள்ளம் குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகமானதால், 7 மதகுகள் வழியாக, தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அத்திமரப்பட்டி, காலாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள வாழைப்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.


தூத்துக்குடி மாநகரில் கோக்கூர், கதிர்வேல்நகர், நேதாஜி நகர், ராஜீவ்நகர், சிவஜோதி நகர், ஆதிபராசக்தி நகர், மச்சாது நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது. மாநகராட்சி சார்பில் ராட்சத மோட்டார்கள் மூலம் மழைநீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது.


தூத்துக்குடி அரசு மருத்துவமனை வளாகம், நீதிமன்ற வளாகம், நீதிபதிகள் குடியிருப்பு, மாவட்ட விளையாட்டு மைதானம், மாவட்ட தொழில் மையம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கி நின்று அதனை வெளியேற்றும் பணிகளும் நடந்தது. மாவட்ட ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.


தூத்துக்குடி மாநகரில் மழைநீரை வெளியேற்றும் பணிகளை, கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மேயர் ஜெகன் பெரியசாமி, ஆணையர் பிரியங்கா ஆகியோர் ஆய்வு செய்து, மழைநீரை வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.


விவசாய நிலங்களிலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பயிர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. மழை தொடர்ந்து பெய்யக்கூடிய சூழல் இருப்பதால், பொதுமக்கள்  அதிகாரிகள் வெளியிடும் அறிவுரைகளைக் கடைபிடிக்கவும் மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


கடந்த 2023ஆம் ஆண்டு தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் 2023 போல் மீண்டும் பெரும் சேதம் ஏற்படுமோ என்ற பீதியில் மக்கள் உறைந்துள்ளனர்.

  • Share on

தூத்துக்குடி மீனவ இளைஞருக்கு தமிழக ஆளுநர் கொடுத்த கௌரவம்!

வீர தீர விருதுக்கு 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் : தூத்துக்குடி கலெக்டர் தகவல்

  • Share on