கடந்த சில தினங்களாக தென்மாவட்டங்களில் குறிப்பாக தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் அதிக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்படை விட 5 சதவீதம் அதிகமாக பதிவாகி உள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா கூறியுள்ளார்.
மேலும், இந்திய கடல் பகுதியில் 3 சுழற்சிகள் காணப்படுகின்றன. அந்தமான், குமரிக்கடல், அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் சுழற்சிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. மலாக்கா ஜலசந்தி, அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு வங்க கடலில் புயலாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்.
டெல்டா மாவட்டங்களில் நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி, நெல்லையில் நாளை கனமுதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. நவ.24,26-ல் சூறவாளிக்காற்று 35-45 கி.மீ வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 4 இடங்களில் அதி கனமழை பதிவாகி உள்ளது. என வானிலை ஆய்வு மைய இயக்குனர் அமுதா தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. இந்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. தூத்துக்குடியில் பொதுமக்கள் மழையால் பாதிப்படையாத வகையில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், கனிமொழி எம்பி, அமைச்சர் கீதாஜீவன், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில்,

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையின் படி தூத்துக்குடி மாவட்டத்தில், 24.11.2025, 25.11.2025, 26.11.2025, 27.11.2025, 28.11.2025 ஆகிய நாட்களில் கனமழையும், 29.11.2025, 30.11.2025 ஆகிய இரு தினங்கள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை கண்காணித்து மணல் மூடைகள், மரம் அறுக்கும் கருவிகள் முதலிய பொருள்களை தயார் நிலையில் வைத்திடவும் மற்றும் நிவாரண செய்யவும் முகாம்களையும் தயார் நிலையில் வைத்திடவும் தக்க முன்னேற்பாடுகள் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேற்குறிப்பிட்ட நாளில் அனைத்து துறை அலுவலர்களும் பணியில் இருக்க வேண்டும். இது மிகவும் அவசரம் என மாவட்ட ஆட்சியர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.



