• vilasalnews@gmail.com

சுழலும் பாசறை செயலாளர்... உற்சாகத்தில் ஓட்டப்பிடாரம் அதிமுகவினர்!

  • Share on

தங்கள் கைவசம் இருந்த ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தற்போது திமுக வசம் சென்று விட்டதே என கவலை தோய்ந்த முகத்தோடு இருக்கும் ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுகவினருக்கு, வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளரும், கோவில்பட்டி நகர்மன்ற உறுப்பினருமான எம்ஆர்வி கவியரசனின் களப்பணி உற்சாகம் தருவதாக உட்கட்சி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.


வீரபாண்டிய கட்டபொம்மன், வ.உ. சிதம்பரனார், வீரன் சுந்தரலிங்கனார் உள்ளிட்ட பல்வேறு இந்திய விடுதலை போராட்ட வீரர்களை தந்த தொகுதியாக ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி விளங்குகிறது.


தூத்துக்குடி மாவட்டத்தில்  ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி 1962 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சில வார்டுகள், ஓட்டப்பிடாரம், கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சில பகுதிகளை உள்ளடக்கியது.


தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் அதிகளவில் இருப்பதால் இந்த தொகுதி தனித்தொகுதியாக அறிவிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரே தனித்தொகுதி ஓட்டப்பிடாரம் ஆகும். இது பரப்பளவில் பெரிய சட்டமன்ற தொகுதியாக விளங்கி வருகிறது.


இங்கு பெரிய அளவில் நீர்பிடிப்பு பகுதிகள் இல்லாததால் மானாவாரி விவசாயம்தான் அதிக அளவில் நடக்கிறது. இந்த தொகுதியில் அமைந்து உள்ள புதியம்புத்தூரில் ஆயத்த ஆடைகள் உற்பத்தி அதிக அளவு நடந்து வருகிறது. இந்த தொகுதிக்குட்பட்ட தருவைகுளம் பகுதியில் மீனவர்கள் அதிகம் உள்ளனர்.


ஓட்டப்பிடாரம் தொகுதி தொடக்கத்தில் பொது தொகுதியாக இருந்தது. அப்போது 1962 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 1967 ஆம் ஆண்டு கடம்பூர் தொகுதி நீக்கப்பட்டு பெரும்பான்மையான பகுதிகள் ஓட்டப்பிடாரம் தொகுதியில் சேர்க்கப்பட்டதால் தனித்தொகுதியாக மாற்றப்பட்டது.


இந்த தொகுதி 1962 முதல் இதுவரை 15 தேர்தல்களை சந்தித்து உள்ளது. இதில் 3 முறை காங்கிரஸ் கட்சியும், 4 முறை அதிமுகவும், 3 முறை திமுகவும் வெற்றி பெற்று உள்ளது. இதுதவிர இந்திய கம்யூனிஸ்டு கட்சி, சுதந்திரா கட்சி, பார்வர்டு பிளாக் கட்சி, ஜனதா கட்சி, புதிய தமிழகம் கட்சி உள்ளிட்டவை தலா ஒருமுறை வெற்றி பெற்று உள்ளது.


கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சுந்தர்ராஜ் வெற்றி பெற்றார். கடந்த 2019 ஆம் ஆண்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதால் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் முதல் முறையாக போட்டியிட்ட சண்முகையா வெற்றி பெற்றார். தொடர்ந்து 2021 ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மீண்டும் திமுக சார்பில் போட்டியிட்ட சண்முகையா தொடர்ந்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.


1991, 2001, 2006, 2016 ஆகிய தேர்தல்களில் அதிமுக நேரடியாகவும், 2011 தேர்தலில் அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் என ஓட்டப்பிடாரம் தொகுதியானது அதிமுக வசம் பலமாக இருந்த நிலையில் தான், அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும் போது நடந்த 2019 இடைத்தேர்தலில் திமுக வென்று ஓட்டப்பிடாரம் தொகுதி வரலாறு மாற்றி அமைக்கப்பட்டது.


அதாவது ஓட்டப்பிடாரம் அதிமுக என்றால் அது முன்னாள் எம்எல்ஏ மோகன் மட்டுமே என்பதும், அவரை தாண்டி இங்கு கட்சியில் வேறு யாருடைய முகமும் அடையாளம் காட்டப்படாத அளவிற்கு முன்னாள் எம்எல்ஏ மோகனின் அரசியல் நடவடிக்கை இருப்பதால் சொந்த கட்சியினரே பலரும் அவரது வெற்றியை விரும்பாததால், அதிமுக ஆளும் கட்சியாக இருக்கும் போது நடந்த 2019 இடைத்தேர்தலில் திமுக வெல்ல காரணம் என்றும் அப்போது சொல்லப்பட்டது.


அதோடு இல்லாமல், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட வேறு யாருமே முன்வராதது போலவும், இவரை விட்டா வேறு ஆளே இல்லாதது போலவும் 2021 ல் நடந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் மீண்டும் முன்னாள் எம்எல்ஏ மோகனுக்கே தலைமை போட்டியிட வாய்ப்பு வழங்க, மீண்டும் அவர் தோல்வியடைய, அப்போது தொகுதியில் மயான அமைதிக்கு சென்ற அதிமுக இன்னும் அதில் இருந்து மீள வில்லையாம்.


மேலும், கட்சி தலைமை சொல்லக்கூடிய கூட்டங்களை தாண்டி, கட்சியை வளர்க்க, உயிர்போடு வைக்க எந்தவொரு நடவடிக்கையையும் முன்னாள் எம்எல்ஏ மோகன் மேற்கொள்வது இல்லையென அக்கட்சியினர் அவர் மீது கடும் அதிர்ப்தியில் இருக்கின்றனராம். 


இத்தகைய சூழலில் தான் தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளரும், கோவில்பட்டி நகர் மன்ற உறுப்பினருமான எம்.ஆர்.வி.கவியரசனின் கட்சி மற்றும் மக்கள் பணியானது தூத்துக்குடி வடக்கு பகுதி மற்றும் ஓட்டப்பிடாரம் தொகுதியில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.


தேசத்திற்காகவும், மக்கள் பணிக்காகவும் வாழ்ந்து மறைந்த தலைவர்களின் விழாக்களில் பங்கெடுத்து சிறப்பு செய்வது, கட்சியினரின் அழைப்பின் பேரில் அவர்களது இல்ல விழா, ஊர் திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்பது, பொதுமக்களின் தேவைகளை, கோரிக்கைகளை அறிந்து அதை தீர்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வது என பல்வேறு சமூக பணிகளில் தன்னை முழுவதுமான ஈடுபடுத்திக்கொண்டு ஆற்றும் எம்.ஆர்.வி.கவியரசனின் பணியானது அதிமுகவினருக்கு பெரும் உற்சாகத்தை தருவதாக சொல்லப்படுகிறது.


தேர்தல் காலம் நெருங்கட்டும் அப்போது பார்த்து கொள்ளலாம் என்றில்லாமல், எப்போதும் கட்சி மற்றும் மக்கள் பணிகளை செய்யும் இவரை போன்றோரையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். இவரை போன்றோரால் மட்டும் இழந்த ஓட்டப்பிடாரம் தொகுதியை மீட்க முடியும் நம்பிக்கை எங்களுக்கு வந்துள்ளதாக ஓட்டப்பிடாரம் தொகுதி அதிமுகவினர் பேச தொடங்கி உள்ளனர்.


கடந்த காலங்களில் மாவட்ட செயலாளர்கள் பரிந்துரைக்கும் பெயர்களில் ஒருவரை வேட்பாளராக டிக் அடித்த தலைமை, இந்தமுறை மாவட்ட செயலாளர்களுக்கு சீட் உறுதி. ஆனால் தங்களது சார்பாக  பரிந்துரைப்போரை வேட்பாளராக தேர்வு செய்ய முடியாது. வேட்பாளர் தேர்வை நான் பார்த்துக்கொள்கிறேன். ஆகவே இதில் மாவட்ட செயலாளர்கள் தலையிடக்கூடாது என கட்சியின் பொதுச்செயலாளர் திட்டவட்டமாக மாவட்ட செயலாளர்களிடம் கூறிவிட்டாராம். ஆகவே, கடந்த காலங்களை போல ஜெயலலிதா பாணியில் யார் வேண்மானாலும் அதிமுக வேட்பாளர் ஆகலாம் என்ற சூழல் அதிமுகவில் உள்ளதாக அதிமுக தலைமை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.


மொத்தத்தில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் அதிமுக மீளுமா? அல்லது கொஞ்சமாவது வாழுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • Share on

தூத்துக்குடியில் 8 ஆம் வகுப்பு முதல் முதுநிலை வரை... இளைஞர்களுக்கு காத்திருக்கும் பிரம்மாண்ட வாய்ப்பு!

தூத்துக்குடியில் அசால்டாக செயின் பறிப்பில் ஈடுபடும் மர்ம நபர்கள்... அச்சத்தில் பொதுமக்கள்!

  • Share on