தூத்துக்குடி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் திருக்குறள் திருப்பணிகள் பயிலரங்கம் நடைபெற்றது.
தமிழக அரசின் ஆணையின்படி மாவட்டந்தோறும் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் திருக்குறள் திருப்பணிகள் திட்ட வகுப்பு நடந்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் சுந்தர் வழிகாட்டுதலில் இந்த வகுப்புகள் நடைபெற்று வருகிறது.
இத்திட்டத்தின்படி புனித பிரான்சிஸ் சவேரியார் மேல்நிலைப்பள்ளியில் இப்பயிலரங்கம் நடைபெற்றது. பள்ளியின் தாளாளர் அருள்முனைவர் பிரான்சிஸ் சேவியர் சே.ச.தலைமை தாங்கினார். பள்ளியின் தலைமையாசிரியர் அருள்திரு. அமல்ராஜ் சே.ச.முன்னிலை வகித்தார்.
வள்ளுவர் காட்டும் வாழ்வியல் என்ற தலைப்பில் தாளாளர் அருள்முனைவர் பிரான்சிஸ் சேவியர் சே.ச. உரைநிகழ்தினார். திருக்குறளுக்கு உரை எழுதியுள்ள அன்பழகனார் இத்திட்டத்தின் நோக்கம் மற்றும் திருக்குறளைக் கற்க வேண்டியதன் தேவை குறித்தும் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்வில் பள்ளியின் தமிழாசிரியர்கள் ராஜ்குமார், எட்வின் சார்லஸ், அந்தோனி மற்றும் 80 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
முன்னதாக நிகழ்வுக்கு வந்தவர்களைத் தமிழ்நாடு அரசின் தமிழ்ச்செம்மல் விருது பெற்ற ஆசிரியர் நெய்தல் அண்டோ வரவேற்றார். மாணவர் சாந்தோ நன்றியுரை கூறினார். நிகழ்ச்சியை மாணவர் மிஸ்பா உல்ஹக் தொகுத்து வழங்கினார்.



