தூத்துக்குடியில் ரூ.10 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு பாதுகாப்பு மையம் மற்றும் அரசு மாதிரி பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கலை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி நாட்டி தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம், அய்யனடைப்பு ஊராட்சி சோரீஸ்புரம் அரசு தொழிற்பயிற்சி வளாகத்தில் இன்று (26:10.2025) ஊரக வளர்ச்சி மற்றும் உராட்சித்துறை சார்பில் மாநில பேரிடர் நிவாரண (SDRF) 2024 - 2025 ஆம் ஆண்டு நிதியிலிருந்து ரூ.10 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள பல்நோக்கு பாதுகாப்பு மையம் மற்றும் அரசு மாதிரி பள்ளி கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கலை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி, மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் நாட்டி தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்ததாவது:-
ஏறத்தாழ 1000க்கும் மேற்பட்ட நபர்கள் தங்கக்கூடிய பல்நோக்கு புகலிடம் மையம் இங்கு அமைக்கப்படவுள்ளது. புயல் மற்றும் பேரிடர் இல்லாத நேரங்களில் மாதிரி பள்ளியாகவும் பயன்படுத்துவதற்கான வாய்ப்பாக அதனை இணைத்து உருவாக்குவதற்காகவும், ஏறத்தாழ 800க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த மாதிரிப் பள்ளியில் படிக்க கூடிய வகையிலும் இன்றையதினம் அய்யனடைப்பு ஊராட்சியில் உள்ள சோரீஸ்புரம் பகுதியில் அமைந்துள்ள ஐடிஐ வளாகத்தில் சுமார் ரூ.10 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மேலும், சுமார் 20 ஆயிரம் சதுர அடிக்கு மேல் உள்ள பரப்பளவில் கட்டப்படவுள்ள இக்கட்டிடத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலுக்கிணங்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளர் சிறப்பு திருத்தத்தில் மற்ற மாநிலங்களில் ஏற்பட்ட குழப்பங்கள் இங்கு இருக்க கூடாது என்ற வகையிலே தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவான ஆணைகளையும், விளக்கங்களையும் தந்திருக்கிறார்கள். எப்படி இதை எதிர்கொள்வது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இதை பயன்படுத்தி பல இடங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் மற்றும் லட்சக்கணக்கானவர்களுடைய வாக்குரிமை பறிக்கப்பட்டிருக்கிறது. அது தமிழகத்தில் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம் என தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா, மேயர் ஜெகன், மாவட்ட வருவாய் அலுவலர் இரவிச்சந்திரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) செல்வி ஐஸ்வர்யா, செயற்பொறியாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முருகன், தூத்துக்குடி வட்டாட்சியர் திருமணி ஸ்டாலின், வட்டார வளர்ச்சி அலுவலர் ஹைக்கோட் ராஜா, உதவி பொறியாளர் ரவி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.



