தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து தூக்கி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் பொட்டலூரணி கிராமத்தின் புறவழிச் சாலை பகுதியில் உள்ள தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் அரசு பேருந்து உள்ளிட்ட அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என்றும், பொட்டலூரணி கிராமம் அருகே செயல்பட்டு வரும் மீன் தொழிற்சாலையை மூட வேண்டும் எனவும் வலியுறுத்தி ஆண்கள், பெண்கள் என சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய்த் துறையினர், போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனையடுத்து போலீசார், அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்ய முற்பட்டனர். இச்சம்பவத்திற்கு போராட்டத்தில் ஈடுபட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையிலும் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் என அனைவரையும் போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.
இதனால், தூத்துக்குடி - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, அப்பகுதி முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது.



