தூத்துக்குடி அருகே புதுக்கோட்டை புதிய மேம்பாலம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக மருத்துவர் அணி செயலாளரும், கருங்குளம் முன்னாள் யூனியன் தலைவருமான டாக்டர் கோசல் ராம் ராஜா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை வளர்ந்து வரும் நகரமாகும். இங்கு பல்வேறு தொழிற்சாலைகள் அதிகம் உள்ளது. இத்தகைய புதுக்கோட்டையில் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு, புதிய மேம்பாலம் அருகே வேகத்தடை அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தான், தூத்துக்குடி விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டு அதன் திறப்பு விழாவிற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்த போது, புதுக்கோட்டை புதிய மேம்பாலத்தில் கீழே உள்ள வேகத்தடைகள் அனைத்தும் எடுக்கப்பட்டது. ஆனால் மீண்டும் போடவில்லை. இதனால் சாலையில் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வருகிறது.
எனவே, பொதுமக்கள் நலன் கருதி மாவட்ட நிர்வாகமும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளும் உடனடியாக புதுக்கோட்டை மேம்பாலம் அருகே ஏற்கனவே இருந்தவாறு அனைத்து வேகத்தடைகளையும் மீண்டும் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




