கோவில்பட்டி, தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் முக்கியமான வணிக, தொழில்துறை மற்றும் கல்வி மையமாக விளங்கிவருகிறது.
கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக, வந்தே பாரத் விரைவு இரயிலுக்கு கோவில்பட்டியில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்பது இருந்து வருகிறது.
இங்கு வந்தே பாரத் விரைவு இரயிலுக்கு நிறுத்தம் ஏற்படுத்துவதன் மூலம் ஆயிரக்கணக்கான பயணிகள், மாணவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெரிதும் பயனடைவர். மேலும், இந்த நிறுத்தம் கோவில்பட்டி நகர மக்களுக்கு மட்டுமல்லாமல், எட்டயபுரம், கயத்தார், சாத்தூர், விளாத்திகுளம் உள்ளிட்ட அருகிலுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கும் பயனளிக்கும். இது சென்னை மற்றும் திருநெல்வேலி நகரங்களுக்கான பயண நேரத்தைக் கணிசமாகக் குறைக்கும்.

இந்த நிலையில் தான், சோதனை அடிப்படையில் சென்னை எழும்பூர் - நெல்லை வந்தே பாரத் இரயில் கோவில்பட்டி இரயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று மத்திய இரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
இதற்கிடையே, எங்களது கோரிக்கை ஏற்று தான் மத்திய இரயில்வே வாரியம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது என அதிமுக, பாஜக, மதிமுகவினர் பதிவிட்டு சமூகவலைதளங்களில் மல்லு கட்ட தொடங்கி உள்ளனர். யாருடைய கோரிக்கைகாக அறிவிப்பு வந்தது என்பதெல்லாம் எங்களுக்கு தேவையில்லை. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றி தந்த மத்திய அரசிற்கு நன்றி தெரிவித்து மகிழ்கின்றனர் பொதுமக்களும் பயணிகளும்.







