• vilasalnews@gmail.com

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கேட்ட திடீர் சத்தம்... எடப்பாடி பழனிசாமி வரை போனது விவகாரம்!

  • Share on

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் அங்கு மெக்கானிக்கல் பிரிவில் முதலாம் ஆண்டு பயின்று வரும் ஒரு மாணவன் கல்லூரிக்கு நாட்டு வெடியை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவரது நண்பர்கள் அந்த வெடியின் திரியை இழுத்தபோது, அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அருகில் இருந்த 2 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.


இதனையடுத்து அந்த மாணவர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வெடி வெடித்தது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்த நிலையில், தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்தது பட்டாசு என மாவட்ட காவல்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதில், "சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று அங்கு சோதனை செய்ததில், அது ஒரு மாணவரால் கொண்டுவரப்பட்ட பட்டாசு வெடித்துள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே இது சம்பந்தமாக விசாரணையில் உள்ள நிலையில், தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம்" என்று காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதற்கிடையே, இவ்விவகாரம் தொடர்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.


அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-


தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதில் ஒரு மாணவருக்கு கை முழுமையாக சிதைந்துள்ளதாகவும், மற்றொரு மாணவருக்கு கண்ணில் காயம் எனவும் செய்திகள் வருகின்றன.


பள்ளி மாணவர்கள் இடையே கத்திக் குத்து, புத்தகப் பையில் அரிவாள், அரசுக் கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு. கல்வியிற் சிறந்த தமிழ்நாடு என்ற புகழோடு அஇஅதிமுக ஆட்சியில் இருந்த தமிழ்நாட்டை, ஸ்டாலின் மாடல் அரசு இட்டுச்சென்றுள்ள நிலை இது தான்.


அரசுக் கல்லூரிக்குள் வெடிகுண்டு வருவதற்கும் வழக்கம் போல ஆக, தனிப்பட்ட காரணம், Justification அளிக்க இந்த அரசு முயற்சிக்க நினைத்தால், அதற்கு இப்போதே வெட்கித் தலை குனிந்துக் கொள்ளட்டும்.


அரசுக் கல்லூரிக்குள் நாட்டு வெடிகுண்டு வரும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலையும் நிலையில், இப்போதாவது தனது Denial Zone-ல் இருந்து வெளியே வருவாரா இந்த பொம்மை முதல்வர்?


நான் அரசியல் ரீதியான விமர்சனங்கள் வைத்தால் மட்டும் பாய்ந்து வந்து வீர வசனம் பேசும் ஸ்டாலின், மக்களுக்கான கேள்விகளை, குறிப்பாக சட்டம் ஒழுங்கைப் பற்றிக் கேட்டால் மட்டும் பம்மிப் பதுங்கிக் கொள்வது ஏன்? படிக்கும் மாணவர்கள் கையில் இருக்க வேண்டியவை புத்தகங்கள். வெடிகுண்டுகள் அல்ல!


நாட்டு வெடிகுண்டு விவகாரம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட்டு, தக்க சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.


ஆயுதங்கள், வெடிகுண்டு என தமிழ்நாட்டை கொலைக் களமாக மாற்றி வரும் திமுக ஆட்சியிடம் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என கூறப்பட்டுள்ளது.

  • Share on

தூத்துக்குடி ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை : ரூ.1.52 லட்சம் பணம் பறிமுதல்!

தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வெடித்தது வெடித்தது பட்டாசு தான்!

  • Share on