சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவர் காளியம்மாள். இவர் கடந்த பிப்ரவரி மாதம் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
சிறந்த பேச்சாளரான காளியம்மாள் விலகியது அக்கட்சிக்குள் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் காளியம்மாள் வேறு கட்சியில் இணைவார் என்று பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதுவரை அவர் எந்த கட்சியிலும் இணையவில்லை.
மேலும், விஜய்யின் தவெகவில் இணைவார் எனக் கூறப்பட்ட நிலையில் அக்கட்சியிலும் அவர் இன்னும் சேரவில்லை. இதற்கிடையே அவர், மீனவ சமூக மக்களுக்கான அரசியல் மற்றும் அதிகார கட்டமைப்பை உருவாக்கும் ஒரு சமூக செயற்பாட்டாளராகவும் தன்னை அடையாளப்படுத்தி வருகிறார்.
அதன் தொடர்ச்சியாகவே, கடற்கரையோர மக்கள் மற்றும் மீனவ சமுதாய அமைப்புகளின் அழைப்பின் பேரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து, தேர்தலில் கடற்கரையோர மக்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும். இந்த கோரிக்கையை அதிகார உரிமைக்காக வைக்கிறோம் என தொடர்ச்சியாக முழங்கி வருகிறார்.
இந்த நிலையில், தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ் பெற்ற தூய பனிமய மாதா பேராலயத்தின் 443 வது ஆண்டு திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், திருவிழாவின் இறுதி நாளான இன்று ( ஆகஸ்ட் 5 ) பங்கேற்பதற்காக முன்னாள் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி காளியம்மாள் தூத்துக்குடிக்கு வருகை தந்தார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து காளியம்மாள் பேசியதாவது:-
2026 சட்டமன்றத் தேர்தல் மிக விரைவில் வர உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில், பாண்டியாபதி தேர்மாறன் குழுவினர் சார்பாக ஒரு கோரிக்கையை வைக்கிறோம். பல ஆண்டுகளாக கடற்கரையோர மக்களுக்கு சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. இந்த சட்டமன்றத் தேர்தலில் கடற்கரையோர மக்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். இந்த கோரிக்கையை நாங்கள் அதிகார உரிமைக்காக வைக்கிறோம்.
வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிகள் கடற்கரை மக்களுக்கு வாய்ப்புகள் வழங்குகிறார்களோ அவர்களை நாங்கள் தேர்தலில் வெற்றி பெற வைப்போம். குறிப்பாக, தூத்துக்குடி, திருச்செந்தூரில் சட்டமன்றத் தேர்தலில் வாய்ப்பு வழங்க வேண்டும். அதுவும் சமூக ஆர்வலராக, மீனவ மக்களுக்காக போராடுகின்ற நபரை பார்த்து வேட்பாளர்களை நிறுத்த வேண்டும். எங்கள் மீனவ மக்களின் வலிகளை புரிந்தவர்களாக இருக்க வேண்டும். அப்படி கடற்கரையோர மக்களை அவர்கள் நிறுத்தவில்லை என்றால் நாங்கள் சுயேட்சையாக போட்டியிடவும், வாக்கு செலுத்தாமல் புறக்கணிக்கவும் கூட தயாராக இருக்கின்றோம்.
எனது அரசியல் பயணம் ஒரு போதும் ஓயாது. நிச்சயமாக வருகின்ற தேர்தலில் களத்தில் நிற்க தயாராக இருக்கிறேன். தேர்தலில் கடற்கரையோர பெண்களுக்கும் வாய்ப்புகள் வழங்க வேண்டும் என கூறினார்.
ஆகவே, தூத்துக்குடி அல்லது திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதியில் மீனவ மக்களின் பிரதிநியாக சுயேட்சையாகவோ அல்லது இத்தொகுதிகளில் தனக்கு சீட் வழங்க முன் வரக்கூடிய கட்சியில் இணைந்து போட்டியிடவோ காளியம்மாள் உறுதியாக இருப்பது தெரிய வருகிறது. மேலும், இந்த இரு தொகுதியில் அவர் அடிக்கடி வருகை தந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் அதனை ஊர்ஜிதபடுத்திக்கொள்ள முடிகிறது.
அதே போல, தூத்துக்குடியில் எதிர்கட்சிக்கான அரசியலை முன்னெடுத்து, அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் படி அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு, அவ்வப்போது ஆளும் கட்சியின் அமைச்சராகவும், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கக்கூடிய கீதஜீவனுக்கு எதிராக கண்டன அறிக்கைகள் கொடுத்து உள்ளூர் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னலுக்கு, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி வேட்பாளராகவும், அவரை வெற்றி பெற வைக்கக்கூடிய அரசியல் நடவடிக்கைகளிலும் காளியம்மாள் ஈடுபடக்கூடும் என்பதை, "எனது அரசியல் பயணம் ஒரு போதும் ஓயாது. நிச்சயமாக வருகின்ற தேர்தலில் களத்தில் நிற்க தயாராக இருக்கிறேன். தேர்தலில் கடற்கரையோர பெண்களுக்கும் வாய்ப்புகள் வழங்க வேண்டும்" என அவரது இந்த கூற்றின் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது என அரசியல் பார்வையாளர்கள் கணிக்கின்றனர்.
மொத்தத்தில் தூத்துக்குடி, திருச்செந்தூர் தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் தவெக அஜிதா ஆக்னலும், தவெக அல்லது அதிமுக சார்பில் காளியம்மாளும் வேட்பாளராக களம் இறங்கி அடிக்கலாம் என்ற ஒரு கருத்து தற்போது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வந்துள்ளதை காண முடிகிறது. எதுவானாலும் தேர்தல் காலம் நெருங்க நெருங்கவே எல்லாம் அதிகாரபூர்வமாக தெரிய வரும் என்பது தான் தற்போதைய நிதர்சனமான உண்மை.




