ஓட்டப்பிடாரம் அருகே சாலையோரத்தில் நடந்து சென்ற பெண் மீது வேன் மோதியதில் அவா் பரிதாபமாக உயிரிழந்தார்.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள ஓசநூத்து கிராமத்தை சேர்ந்தவர் சக்தி. இவரது மனைவி செல்வி (48). இருவரும் கூலி தொழிலாளர்கள். செல்வி கண்டன்கருப்பன் கோவில் அருகேயுள்ள தனியார் தோட்டத்தில் கூலி வேலை செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் அவர் வழக்கம்போல் வீட்டிலிருந்து தோட்டத்திற்கு வேலைக்கு புறப்பட்டு சென்றுள்ளாா்.
நெல்லை - ஓட்டப்பிடாரம் நெடுஞ்சாலை ஓரத்தில் அவர் நடந்து சென்று கொண்டு இருந்த போது, கண்டகருப்பன் தோப்பு அருகே வடக்குஆரைக்குளத்தில் இருந்து ஓட்டப்பிடாரம் நோக்கி வந்த வேன் ஒன்று அவர் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயங்கம் ஏற்பட்டது. உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, அதே வேனில் ஏற்றி ஓட்டப்பிடாரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து ஓட்டப்பிடாரம் போலீசாா் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரான வடக்கு ஆரைக்குளம் கிராமத்தை சேர்ந்த மணி மகன் விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




