மக்களை ஏமாற்ற உங்களுடன் ஸ்டாலின் என்று வீடு வீடாக வருகிறார். இதனை மக்கள் நம்பவேண்டாம். மக்கள் உஷாராக இருக்கவேண்டும் ஏமாந்துவிடக்கூடாது என எடப்பாடி பழனிசாமி விளாத்திகுளம் பிரச்சாரத்தில் கூறினார். மேலும் உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் வீடுவீடாக மக்களை சந்திக்கிறார்கள். மக்களுக்கு 46 பிரச்னைகள் இருப்பதாக முதல்வரே சொல்கிறார். 4 ஆண்டுக்கு பின் இப்பொழுதான் மக்களுக்கு இவ்வளவு பிரச்னைகள் இருப்பதை முதல்வர் கண்டுபிடித்துள்ளார். இப்படிப்பட்ட முதல் வர் தேவையா? எனவும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு நடந்த மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற அதிமுகவின் எழுச்சி பயண பிரசார கூட்டத்தில் துாத்துக்குடி வடக்கு மாவட்டச் அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்ச ருமான எம்எல்ஏ.கடம்பூர் ராஜூ தலைமை வகித்தார். கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:
நேரம் அதிகமாகி விட்டாலும் மிகப்பெரிய அளவில் மக்கள் காத்திருக்கிறீர்கள், 120 கிலோ மீட்டர் பயணம் செய்து இங்கு வந்திருக்கிறேன். இதனால் வருவதற்கு காலதாமதமாகி விட்டது. அனைவரும் பொறுத்துக் கொள்ள வேண்டும்.
விளாத்திகுளம் பகுதி விவசாயிகள் நிறைந்த பகுதி, விவசாயிகள் பூமிகள் இங்கு அதிகம். விவசாயிகளுக்காக அதிமுக அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி யுள்ளது. இதனால் என்றைக்கும் அதிமுகவிற்குதான் ஆதரவாக இருக்ககிறீர்கள். விளாத்திகுளம் அதிமுகவின் கோட்டையாக தொடர்ந்து திகழ்கிறது.
இந்தப் பகுதியில் புயல், வெள்ளம் சீற்றம் ஏற்பட்ட போது ரூ. 400 கோடி நிவாரணம் அளித்தது அதிமுக அரசு தான். விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள், சிறந்து விளங்க பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியதும் அதிமுக அரசுதான்.
குடிமராமத்து திட்டம்!
குடிமராமத்து திட்டம் என்கிற மிகப்பெரிய திட்டத்தை கொண்டுவந்து குளம் கண்மாய்கள் அனைத்தையும் ஆழப்படுத்தி அதன் மூலம் கிடைக்கும் வண்டல் மண்ணை விவசாயிகளுக்கு இலவசமாக கொடுத்தது அதிமுக அரசு தான். ஆனால் இந்த திட்டத்தையெல்லாம் திமுக அரசு நிறுத்திவிட்டது. இந்த அரசு உங்களுக்கு தேவையா? (கூட்டத்தினர் வேண்டாம், வேண்டாம் என குரல்கொடுத்தனர்)
விவசாயித்திற்கு உயிர் நாடியே நீர் தான். குடிநீரை நம்பி வாழும் விவசாயிகள் ஏற்றம் பெற வேண்டும். இந்த ஏற்றத்தை கொடுத்தது இந்தியாவில் அதிமுக அரசு மட்டும் தான். விளாத்திகுளம் பகுதியை பொறுத்தவரை வத்தல் பருத்தி, மக்காச்சோளம் அதிக விளைச்சல் உள்ள பகுதி. இந்த பயிர்களுக்கு நல்ல விலை கிடைத்தால்தான் விவசாயிகள் முன்னேற முடியும். அந்த முன்னேற்றத்தை கொடுத்தது எங்கள் அரசு தான். மக்காச்சோள பயிரில் படைப்புழு, அமெரிக்கன் படைப்புழு இந்தப்பகுதியில் தர்க்கியபோது அதனை உடனடியாக ஆய்வு செய்யச்சொல்லி அதற்காக 156 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்ததும் அதிமுக அரசுதான்.
இந்தப்படைப்புழுவை நீக்குவதற்கு பூச்சிக்கொல்லிமருந்து அடிப்பதற்கு 48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியதும் எங்கள் அரசு தான். விவசாயிகள் நல்ல முறையில் வாழ்ந்தால் நாடு செழிக்கும். அதற்காகத்தான் இதுபோன்ற எண்ணற்ற திட்டங்களை அதிமுக அரசு நிறைவேற்றி காப்பாற்றியது.
இயற்கை பேரிடர்களில் பயிர்கள் சேதமடைந்தால் உடனுக்குடன் நிவாரணம் வழங்கி விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் இரண்டு கண்ணாக பார்த்து அவர்களை வாழவைத்ததும் அதிமுக அரசுதான். ஆடு, மாடு, கோழி இலவசமாக வழங்கி விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுத்ததும் அதி முக அரசுதான்.
விவசாயிகளுக்கு வீடு!
மீண்டும் 2026ல் அதிமுக ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கு கான்கிரிட் வீடு கட்டிகொடுப்போம். ஏழை விவசாயிகள், தாழ்த்தப்பட்ட விவசாயிகளுக்கு நிலம் இல் லை என்றாலும் நிலத்தையும் வாங்கி கொடுத்து அதில் கான்கிரீட் வீடும் கட்டிகொடுப்போம்.
அனைத்து ஏழை விவசாயிகளுக்கும் இருப்பதற்கு வீடு வழங்கும் அரசாக அதிமுக அரசு இருக்கும். அதிமுக ஆட்சியில் ஏழை என்ற சொல்லே இல்லை என்கிற நிலையை உருவாக்கி காட்டுவாம். இந்தியாவில் முன் மாதிரியான தமிழகத்தை உருவாக்கிகாட்டுவோம். நான் கிராமத்தில் பிறந்தவன். கிராமத்தின் மக்களின் அனுபவரீதியாக அறிந்திருக்கிறேன்.
எப்போதும் உங்களோடு உங்கள் குடும்பத்தோடு இருக்கிறேன். என்கிற மனநிலைதான் எனக்கு இருக்கிறது. இதனால் 2026ல் உங்களுக்கான அதிமுக அரசு இருக்கும். அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எல்லாம் திமுக நிறுத்திவிட்டது. இன்றைக்கு 1 பவுன் தங்கம் 75 ஆயிரத்திற்கு விற்கிறது. இதனால்தான் நாங்கள் ஏழைகளுக்காக தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கி வந்தோம். 6 லட்சம் பேருக்கு திருமணஉதவி வழங்கியிருக்கிறோம்.
தாலிக்கு தங்கம்!
ஆனால் திமுக அரசு இந்த திட்டத்தை நிறுத்திவிட்டது மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்தால் தாலிக்கு தங்கம் திட்டம் வழங்கப்படும்.
பொங்கலுக்கு அதிமுக அரசில் வேஷ்டி சேலை இலவசமாக வழங்கினோம். திமுக ஆட்சியில் ஒரு சிலருக்கு வேஷ்டி, ஒரு சிலருக்கு சேலை, பலருக்கு எதுவுமே கிடைக்காத நிலைதான் இருக்கிறது. இந்த திட்டத்தை முறையாக திமுக அரசு செயல்படுத்தவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் இந்ததிட்டம் மீண்டும்செயல்ப டுத்தப்படும்.
தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை!
தீபாவளிக்கு பெண்களுக்கு சேலை வழங்கப்படும். கொரோனா காலத்தில் யாருக்கும் வேலை இல்லை. மக்கள் படும் சிரமத்தை எண்ணி ரேஷன் கடை மூலம் சீனி எண்ணெய் அரிசி இலவமாக வழங்கினோம். பொங்கலுக்கு 2500 ரூபாய் வழங்கினோம். இந்தியா வில் இது போன்று எந்த மாநிலத்திலும் செயல்படுத்த வில்லை. கொரோனா காலத்தில் நடக்க முடியாத வயதான மக்கள் சுமார் 7 லட்சம் பேருக்கு வீடுதேடி சென்று உணவு வழங்கினோம்.
கொரோனா தடுப்பினை முன்னின்று செயல்படுத்தியது அதிமுக அரசுதான். கொரோனா காலத்தில் 32 மாவட்டங்களுக்கு நேரடியாக சென்று கலெக்டர் சுகாதாரதுறை அதிகாரிகளை சந்தித்து அனைத்து நடவடிக்கைகளையும் நேரில் செயல்படுத்தினேன். பல்வேறு மருத்துவர்கள் என்னை செல்லக் கூடாது என்று கூறியும் மக்கள்தான எனக்கு முக்கியம் என்று நினைத்து உயிரைக்கூட பொருட் படுத்தாமல் சென்று தடுப்பு பணிகளை முடுக்கிவிட்டேன்.
கொரோனா காலத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஆல் பாஸ் போட்டதும் அதிமுக அரசுதான். விவசாயிகளுக்கு நல்ல விளைச்சல் கிடைக்கவும், எந்த காலத்தில் என்ன பயிர் செய்ய வேண்டும். உழவர் செயலி அறிமுகப்படுத்தி விவசாயிகளை பாதுகாத்தது அதிமுக அரசுதான்.
எதுவும் செய்யவில்லை!
ஆனால் ஸ்டாலின் கரும்புதோட்டத்திற்குள் கான்கிரிட் சாலை அமைத்து அதனை ஆய்வு செய்ய சென்றவர் தான் இப்போதைய முதல்வர். சேலத்தில் 1000 கோடி மதிப்பீட்டில் கால்நடை பூங்கா அமைத்தது இபிஎஸ் அரசு. ஆனால், அதில் உள்ள ஆஸ்பத்திரியைத்தான் ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளார். ஆனால் கட்டினது எல்லாம் அதிமுக அரசுதான்.
மிகப்பெரிய ஆராய்ச்சி நிலையத்தின் கலப்பின பசுக்களை உருவாக்கி 40 லிட்டர் வரை பால் வழங்க கூடிய பசுக்களை வழங்கி அவர்களின் வாழ்வாதாரம் வழங்கியது அதிமுக அரசுதான். இது போன்று கலப்பின ஆடுகளையும் வழங்கியது அதிமுக அரசு தான். விவசாயிகள் உற்பத்தி செய்த காய்கறிகள் விற்கவில்லையென்றால் ஸ்டோரேஜ் செய்வதற்கு குளிர்சாதன குடோன்கள் அமைத்து அவர்களுக்கு நல்லவிலை கிடைக்க ஏற்பாடு செய்தது அதிமுக அரசு. ஆட்சிமாற்றம் ஏற்பட்ட இந்த திட்டத்தையெல்லாம் திமுக அரசு நிறுத்திவிட்டது. விவசாயிகளுக்கு எந்த ஒரு திட்டத்தையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை.
ஏழை மாணவர்களுக்கு 12 ஆயிரம் மதிப்பில் லேப் டாப் வழங்கியது அதிமுக அரசு. அதே போல் அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாத நிலையில் அரசு மாணவர்களுக்கு 7.5 சதவீத உள்ஒதுக்கீடு செய்து 41 சதவீத அரசு பள்ளி மாணவர்கள் 2818 பேர் டாக்டராகியுள்ளனர். எந்த ஆட்சியும் இதுபோன்று செய்யவில்லை .ராமநாதபுரத்தல் நிகழ்ச்சியை முடித்த விட்டு வரும் போது அரசு பள்ளி மாணவர்கள் என்னை சந்தித்தனர். உள்ஒதுக்கீட்டால் தான் நாங்கள் டாக்டராகியுள்ளோம் என்று அவர்கள் கூறியது எனக்கு மன மகிழ்ச்சியையும் நிறைவை தந்தது.
தாமிரபரணி திட்டம்!
விளாத்திகுளம் தொகுதியில் பல்வேறு திட்டங்கள் அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஓமந்துாரர் படம் திறப்பும், அவருக்கு அரசு விழா நடத்தியது. இசை மேதை நல்லப்பசாமிக்கு நினைவுச் சின்னம். உமறுபுலவருக்கு ஆண்டுதோறும் அரசுவிழா. மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு சென்னையில் சிலை அமைத்தது அதிமுக அரசு தான். வறண்ட பூமியான விளாத்திகுளத்தில் வேளாண் பணியை மேற்கொள்ள தாமிரபரணி - வைப்பாறு திட்டத்தை நிறைவேற்றியது அதிமுக அரசுதான். ஆனால் இதற்கான நிலம் எடுக்கும் போதும் ஆட்சி மாற்றத்தின் போது இதனை கைவிட்டு விட்டனர். 2026ல் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் தாமிரபரணி திட்டம் நிறைவேற்றப்படும்.
இந்தப் பகுதியில் உள்ள தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றிக் கொடுப்போம். ஏழை மக்கள் பயன்படுத் தக்கூடிய அரிசி பருப்பு விலை உயர்ந்து விட்டது. ஆனால் போதிய வருமானம் மக்களுக்கு இல்லை. இதனை மாற்ற வேண்டும் என்றால் மீண்டும் அதிமுக ஆட்சி அமைய வேண்டும். விளாத்திகுளத்தில் மிகப்பெரிய அளவில் மக்கள் வரவேற்பு அளித்துள்ளனர். இதனால் விளாத்திகுளம் அதிமுக கோட்டையாக மாறும் என்பதற்கு இந்த கூட்டம் நிரூபணம்.
இதுவரை 50 தொகுதிகளுக்கு மேல் எழுச்சிபயணம் சென்றிருக்கிறேன். இவ்வளவு நேரமாகியும் எனது பேச்சை கேட்க மழையை மற்றும் கால்வலியை கூட பொருட்படுத்தாமல் நீண்ட நேரம் காதத்திருந்த விளாத்திகுளம் மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன்.
2026ல் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் வேட்பாளரை இந்த தொகுதியில் வெற்றிபெற செய்ய வேண்டும். குடும்ப ஆட்சி நடத்தும் ஸ்டாலின் ஆட்சி மீண்டும் வரவேண்டுமா.. ( கூட்டத்தினர் வேண்டாம் வேண்டாம் என்றனர் ) ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் எந்த பதவிக்கும் வரலாம். ஆனால் திமுகவில் மட்டும் அது முடியாது. நான் படிப்படியாக கட்சியில் உயர்ந்தவன். ஆனால் திமுகவில் அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் தான் பதவிக்கு வரமுடியும்.
உங்களுடன் ஸ்டாலின் என்ற பெயரில் வீடுவீடாக மக்களை சந்திக்கிறார்கள். மக்களுக்கு 46 பிரச்னைகள் இருப்பதாக முதல்வரே சொல்கிறார். 4 ஆண்டுக்குபின் இப்பொழுதுதான் மக்களுக்கு இவ்வளவு பிரச்னைகள் இருப்பதை முதல்வர் கண்டுபிடித்துள்ளார். இப்படிப் பட்ட முதல்வர் தேவையா? ( கூட்டத்தினர் தேவை யில்லை தேவையில்லை எனக் கூறினர் ) ஸ்டாலின் எதிர் கட்சி தலைவராக இருந்தபோது கிராம மக்களை சந்தித்து ஒரு பெட்டியை வைத்து குறைகளை இந்த பெட்டியில் போட்டால் நான் ஆட்சிக்கு வந்தவுடன் மனுவை பிரித்து படித்து அந்த மனுக்கு தீர்வு காண்பேன் என்று சொன்னார். அந்தப்பெட்டியில் உள்ள மனு என்னாச்சு என்றே தெரியவில்லை. இப்போது மக்களை ஏமாற்ற உங்களுடன் ஸ்டாலின் என்று வீடுவீடாக வருகிறார். இதனை மக்கள் நம்பவேண்டாம். மக்கள் உஷாராக இருக்க வேண்டும் ஏமாந்து விடக்கூடாது மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., சின்னப்பன், என்.கே.பெருமாள், ஓட்டப்பிடாரம் முன்னாள் எம்.எல்.ஏ., மோகன், மாநில வர்த்தக அணி செயலாளர் செல்லப்பாண்டியன், விளாத்திகுளம் முன்னாள் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன், புதூர் ஒன்றிய செயலாளர்கள் தனஞ்செயன், தனபதி, விளாத்திகுளம் நகர செயலாளர் மாரி முத்து, எட்டையபுரம் நகர செயலாளர் ராஜகுமார், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மணியக்காரன்பட்டி விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.




