• vilasalnews@gmail.com

பறந்தது கொடி... ஆரம்பமானது தூத்துக்குடி மக்களின் திருவிழா!

  • Share on


தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பனிமய மாதா பேராலயம் உலகப் புகழ்பெற்ற ஆலயமாகும்.


இங்கு ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.


அதன்படி, இந்த ஆண்டு 443 ஆம் ஆண்டுக்கான திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.


விழாவை முன்னிட்டு நேற்று மாலை கொடி பவனி நடைபெற்றது. இன்று காலை தூத்துக்குடி மறைமாவட்ட பிஷப் ஸ்டீபன் கூட்டுத் திருப்பலி முடிந்ததும் காலை 8.45 மணியளவில் பனிமயமாதா உருவம் பொறித்த கொடியை ஊர்வலமாக பங்கு தந்தைகள் கொண்டுவந்து பேராலயம் எதிரே உள்ள கொடிமரத்தில் கத்தோலிக்க மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் பங்கு தந்தைகள், பொதுமக்கள் கொடியை ஏற்றினர்.


அப்போது அங்கு கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் "மரியே வாழ்க" என முழக்கமிட்டனர். மேலும், புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு கைகளை தட்டி தங்கள் மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர். மேலும், பேராலயத்துக்கு எதிரே பழைய துறைமுகத்தில் இருந்து சைரன் ஒலி எழுப்பப்பட்டது.


தொடர்ந்து, பகல் 12 மணிக்கு கூத்தன்குழி பாஸ்டர் லென்சன் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் அருட்தந்தை ஆல்பர்ட் ஜான்சன் தலைமையில் அன்னைக்கு பொன் மகுடம் அணிவித்தல் நிகழ்வு நடைபெற்றது. பேராலயத்தில் உள்ள பனிமய மாதா சொரூபத்துக்கு பொன் மகுடம் மற்றும் தங்கம், வைரம், வெள்ளி ஆபகரணங்கள் அணிவிக்கப்பட்டன. இதில் திரளான இறைமக்கள் கலந்து கொண்டு அன்னையை வழிபட்டனர். தொடர்ந்து சிறப்பு திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.


இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன.


கொடியேற்ற நிகழ்ச்சியில், தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான், மாநகராட்சி ஆணையர் பானோத் ம்ருகேந்தர் லால் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


பனிமயமாதா பேராலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகிற ஆகஸ்ட்  5 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

  • Share on

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.305 கோடியாக உயர்வு : நிர்வாக இயக்குனர் தகவல்!

2026ல் அதிமுக வெல்லும் தொகுதிகள் எத்தனை? தூத்துக்குடியில் நின்று அடித்துச் சொல்லும் எஸ்.பி.வேலுமணி!

  • Share on