தூத்துக்குடி மாவட்டத்தில் காற்றாலை, சோலார் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களுக்காக பனை மரங்கள் அழிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தமிழ்நாட்டின் மாநில மரமான பனைமரம், தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் அடையாளங்களில் ஒன்றாக விளங்கிவருகிறது. பனை மரங்கள் வறட்சியை தாங்கி வளரக்கூடியவை. தமிழ்நாட்டில் பனைமரங்கள் அதிகம் உள்ள மாவட்டமாக தூத்துக்குடி உள்ளது. தமிழ் நாட்டின் பொருளாதாரம், சுற்றுச்சூழலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது பனை மரம். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் காற்றாலை, சோலார் மின் நிலையங்கள், மின்பாதைகள் அமைக்கவும், ரியல் எஸ்டேட் தொழிலுக்காகவும் பனை மரங்கள் அதிகளவில் அழிக்கப்பட்டு வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பனை மரங்களை வெட்ட வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரின் அனுமதி பெற்று தான் வெட்ட வேண்டும் என சட்டம் கொண்டு வரப்பட்டுள்ள சூழலில், எந்தவித அனுமதி நடைமுறைகளையும் பின்பற்றாமல் காற்றாலை, சோலார் நிறுவனங்கள் பல இடங்களில் பனை மரங்களை வேரோடு பிடுங்கி எறிகின்றனா். மேலும், ரசாயனம் பயன்படுத்தி பனை மரங்களை பட்டு போக செய்து அழிக்கும் வேலைகளும் நடந்து வருகின்றன. இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக கண்டறிந்து தடுக்க வேண்டும். மேலும், பனை மரங்களை வெட்ட எவ்விதத்திலும் அனுமதி வழங்கக் கூடாது. பனை மரங்களை பாதுகாப்பது மாவட்ட நிர்வாகத்தின் கடமை என்கின்றனா் சமூக ஆர்வலர்கள்.



