தூத்துக்குடி மாவட்டத்தில் 13 காவல் நிலையங்கள் உட்பட தமிழகம் முழுவதும் 280 உதவி ஆய்வாளர் காவல் நிலையங்கள் இன்ஸ்பெக்டர் காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற கூட்டத் தொடரில், காவல்துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான மானியக் கோரிக்கையின் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.
அதில், அவர், ”280 காவல் ஆய்வாளர்கள் பணியிடங்கள் கூடுதலாக உருவாக்கப்பட்டு, எஸ்ஐ தலைமையிலான காவல் நிலையங்கள் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் நிலையங்களாக ரூ.1.18 கோடி செலவில் தரம் உயர்த்தப்படும்” என அறிவித்தார்.
அதன்படி தமிழகம் முழுவதும் 280 எஸ்ஐ தலைமையிலான காவல் நிலையங்கள், ஆய்வாளர்கள் காவல் நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டதாக தமிழக அரசு கடந்த மே 29ஆம் தேதி அரசாணை வெளியிட்டது. அவை தற்போது அமலுக்கு வருவதாக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தை பொருத்தவரையில் தட்டப்பாறை, புதியம்புத்தூர், குரும்பூர், சாயர்புரம், கொப்பம்பட்டி, நாலாட்டின்புத்தூர், சூரங்குடி, குளத்தூர், தருவைகுளம், சங்கரலிங்கபுரம், எப்போதும் வென்றான், புதூர், மெஞ்ஞானபுரம் ஆகிய 13 காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதையடுத்து இந்த காவல் நிலையங்களில் தனியாக காவல் ஆய்வாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
எஸ்.ஐ தலைமையிலான காவல் நிலையங்களுக்கு ஒரு குறிப்பிட்ட வரையிலான அதிகாரம் மட்டுமே உண்டு. ஆனால் அவை ஆய்வாளர் தலைமையில் காவல் நிலையங்கள் தரம் உயர்த்தப்படுவதன் மூலம், அந்தப் பகுதியில் சட்டம் ஒழுங்கு மேம்பாடு, குற்றங்களை தடுத்து, பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவற்றை உறுதிசெய்ய முடியும்.
அப்போது அதிக எண்ணிக்கையில் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் நியமிக்கப்படுவர். இதனால் ரோந்துப் பணி மற்றும் பிற காவல்துறை பணிகளைச் செய்ய முடியும்.
குற்றப் புலனாய்வுக்கான உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்படுவதால், குற்றவாளிகளை விரைவாகக் கண்டுபிடித்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடியும்.



