சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தடையை மீறி தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்க சாவடியில் சுங்கக் கட்டணம் இன்று வசூலிக்கப்பட்டதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனால், டோல்கேட் பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில், தூத்துக்குடியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம், மதுரை எலியார்பத்தி சுங்க சாவடிகளில் மறு உத்தரவு வரும் வரை சுங்க கட்டணம் வசூலிக்க இடைக்கால தடை விதித்தது.
ஆனால், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவை மீறி இன்று காலை முதல், தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் சுங்க சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மேலும், சுங்க கட்டணம் வசூலிப்பது தொடர்பாக டோல்கேட் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இதனால் டோல்கேட் பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நிற்கின்றன. மேலும், அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.




