தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434-ஆம் பசலி ஆண்டு வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தலைமையில் இறுதி நாளான இன்று(27.05.2025) நடைபெற்றது.
இதில் வருவாய்த் தீர்வாயம் நடைபெற்ற நாட்களில் பொதுமக்களிடமிருந்து பட்டா மாறுதல், பட்டா திருத்தம், முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, தனிப் பட்டா, ஆக்கிரமிப்புகள் அகற்ற வேண்டி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பெற்றுக்கொண்டு, அவர்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்து உரிய தீர்வு காண சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தியதன் அடிப்படையில் மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, முதற்கட்டமாக வருவாய்த்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு தலா ரூ.1500 வீதம் ரூ.7,500 மதிப்பில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையினையும், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.10,000 வீதமும், 1 பயனாளிக்கு ரூ.8,000க்கான திருமண உதவித் தொகைகளையும், 1 பயனாளிக்கு ரூ.20,000 இறப்பு நிவாரண உதவித் தொகையினையும், 21 பயனாளிகளுக்கு பட்டா பெயர் மாற்றம், உட்பிரிவு பட்டாக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் இந்த நிதியாண்டிற்கான 1434-ஆம் பசலி வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி, கயத்தார், எட்டயபுரம், விளாத்திகுளம், திருவைகுண்டம், திருச்செந்தூர், சாத்தான்குளம், ஏரல் ஆகிய வருவாய் வட்டங்களில் 14.05.2025 முதல் தொடங்கப்பட்டு இன்றுடன் நிறைவடைகிறது. மேலும், தூத்துக்குடி வருவாய் வட்டத்தில் மட்டும் வருகின்ற 30.05.2025 வரை நடைபெறும்.
இதில் வருவாய்த் தீர்வாயத்தில் பொதுமக்களின் நியாயமான கோரிக்கை மனுக்கள் உடனடியாக வருவாய்த் தீர்வாய அலுவலரால் நிறைவேற்றப்படுகிறது,
அந்த வகையில், ஓட்டப்பிடாரம் வருவாய் வட்டத்தில் இறுதி நாளான இன்று நடைபெற்ற 1434-ஆம் பசலி ஆண்டு வருவாய்த் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) ஓட்டப்பிடாரம் உள்வட்டத்துக்குட்பட்ட சாமிநத்தம், புதியம்புத்தூர், ஜம்புலிங்கபுரம், ஆரைக்குளம், குலசேகரநல்லூர், பாஞ்சாலங்குறிச்சி, ஓட்டப்பிடாரம் ஆகிய வருவாய் கிராமங்களில் வருவாய் / கிராம கணக்குகள், நில ஆவணங்கள் கணக்கு, பயிர் கணக்கு போன்றவை கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள், புள்ளியியல்துறை அலுவலர்கள் எவ்வாறு பராமரித்து வருகின்றனர் என்பது குறித்து வருவாய்த் தீர்வாய அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
இந்நிகழ்ச்சியில், உதவி இயக்குநர் (நில அளவை) தசீனிவாசகன், அலுவலக மேலாளர் (பொது) ரகு, ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் ஆனந்த் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.



