தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக் கோட்டையில் அடிப்படை வசதிகள் புனரமைப்பு செய்து, படைத்தளபதிகள் நினைவு தோரணவாயில்களை (Arch) பராமரிப்பு செய்து புதியதாக தோரணவாயில்கள் அமைத்து தருவது உள்ளிட்டவைகள் தொடர்பான கோரிக்கைகளை ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா துறை சார்ந்தவர்களிடம் வலியுறுத்தி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாஞ்சாலங்குறிச்சி கிராமத்தில் முதல் சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக் கோட்டை அமைந்துள்ளது. இந்த நினைவுக் கோட்டையானது முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது மிகக்கம்பீரமாக கட்டப்பட்டு 1974-ல் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிலையில், கோட்டையில் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக கீழ்கண்ட உள்கட்டமைப்பு வசதிகள் செய்து தரவேண்டும் என சண்முகையா எம்எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார். அதன்படி
1. பிரதான தார்சாலையில் இருந்து கோட்டையின் நுழைவுவாயில் வரை பேவர் பிளாக் தளம் அமைக்க வேண்டும்.
2. கோட்டையின் முன்பு மரங்களை சுற்றி சதுரவடிவில் கல் இருக்கைகள்
அமைக்க வேண்டும்.
3. மூன்று இடங்களில் உயர் கோபுர விளக்குகள் (High Mast Light) அமைக்க வேண்டும்.
4. 32 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் (CCTV Camera) பொருத்த வேண்டும்.
5.கோட்டை நுழைவுவாயிலில் இருக்கும் நீர் ஊற்றுக்களை புதுப்பித்து தர வேண்டும்.
6. குளிர்சாதன வசதியுடன் Digital Mini Theater அமைத்து சுற்றுலா வரும் மாணவர்களுக்கு கட்டபொம்மன் வரலாறு குரும்படம் ஒளிப்பரப்ப வேண்டும்.
7. நினைவு மண்டபத்தின் மேல்தளத்தில் பக்கவாட்டில் கட்டபொம்மன் வரலாறு பற்றிய அழகிய ஓவியம் வரைதல் வேண்டும்.
8. கோட்டை வளாகத்தில் வாகனங்கள் நிறுத்தும் இடம் அமைக்க வேண்டும்.
கோட்டைக்கு ஒட்டப்பிடாரத்தில் இருந்து செல்லும் வழியில் படைத் தளபதிகளை கௌரவிக்கும் வகையில்
1.வீரபாண்டிய கட்டபொம்மன் நுழைவுவாயில்,
2.ஊமைத்துரை தோரணவாயில்,
3.வெள்ளையத்தேவன் தோரணவாயில்,
4.தானாபதிப்பிள்ளை தோரணவாயில்,
5.வீரன் சுந்தரலிங்கம் தோரணவாயில்,
6.வீரசக்கம்மாள் தோரணவாயில் 7.வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை நுழைவு வாயில் (குறுக்குச்சாலை) கட்டப்பட்டுள்ளது.
குறுக்குச்சாலை பாஞ்சாலங்குறிச்சி கோட்டை வரும் வழியில் குறுக்குச்சாலையில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை நுழைவு வாயில் சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனை பழுதுபார்த்து புதுப்பிக்க வேண்டும்.
குறிப்பாக ஒட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் அமைக்கப்பட்டிருந்த 1.வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை நுழைவுவாயில், 2.தானாபதிப்பிள்ளை தோரணவாயில் (Arch) ஆகிய இரண்டும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கனரக வாகனம் மோதி முற்றிலுமாக உடைந்து விட்டது.
இதர நான்கு தோரணவாயில்களும் (Arch) நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதால் புனரமைப்பு செய்திட வேண்டும். ஆகவே மேற்கண்ட அடிப்படை வசதிகள் மற்றும் உடைந்துபோன இரண்டு தோரணவாயில்கள் (Arch) புதியதாக அமைத்தும், சேதமடைந்த நிலையிலுள்ள நுழைவு வாயில், நான்கு தோரணவாயில்கள் (Arch) புனரமைப்பு செய்து தர வேண்டும்.
இவ்வாறு தனது தொகுதிக்கு உட்பட்ட பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டை தொடர்பான பல்வேறு கோரிக்கைகளை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு சண்முகையா எம்எல்ஏ அனுப்பியுள்ளார்.
மேலும், சண்முகையா எம்எல்ஏ கோரிக்கை தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யுமாறும், கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக அடுத்த கட்ட பணிகளை மேற்கொள்ளுமாறும் மாவட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.




