தூத்துக்குடியில் வெள்ள பாதிப்பை கட்டுபடுத்தும் வகையில் அத்திரமப்பட்டி பகுதியில் உள்ள வடிகால் ஓடையை பராமரித்து கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என்று தமிழக வெற்றிக் கழகம் சார்பில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக தமிழக வெற்றிக் கழகம் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் கிராம மக்கள், ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட 55 வது வார்டு அத்திமரப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வழியாக கோரம்பள்ளம் குளத்திலிருந்து காற்றாற்று வெள்ளம் சமயத்தில் நீர் பாய்ச்சலுக்காக கடலுக்கு வெள்ள நீர் செல்வதற்கான நீர் வடிகால் ஓடையானது சுமார் 4 கி.மீ தூரத்திற்கு உள்ளது.
கடந்த 2023ம் ஆண்டு மழை வெள்ளத்தின் போது மேற்படி ஓடையானது உடைந்து முத்தையாபுரம், ஸ்பிக் நகர், தங்கம்மாள்புரம், முள்ளக்காடு, சவேரியார்புரம் ஆகிய பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மேற்படி ஓடையில் உடைந்த பகுதிகளில் சில பகுதிகள் மட்டுமே தற்காலிகமாக சிமெண்ட் பூசி சரி செய்யப்பட்டது.
மேலும், கடந்த ஆண்டு குறைந்த மழை என்பதால் எங்கள் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் வெள்ள பாதிப்பின்றி தப்பியது. மேலும் மழை நேரங்களில் எங்கள் பகுதி விவசாயப் பெருமக்கள் விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலையும் உள்ளது. மேற்படி ஓடை உடைந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் பாதிப்பை கட்டுபடுத்த மேற்படி ஒடை உடையாத வண்ணம் சிமெண்ட கான்கிரீட் தடுப்புச் சுவர் அமைத்து தர வேண்டியுள்ளது.
ஆகையால் மாவட்ட நிர்வாகம் இதில் உடனடியாக தலையிட்டு மேற்படி பகுதிகளில் வெள்ள பாதிப்பை கட்டுபடுத்த ஓடையில் தடுப்புச் சுவர் மற்றும் மழை நேரங்களில் விவசாய நிலங்களுக்கு செல்லும் வண்ணம் மேற்படி பகுதியை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.




