ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் உண்மைக்கு புறம்பான அவதூறு செய்திகளை பரப்பி வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தூத்துக்குடி எஸ்பி அலுவலகத்திற்கு அடுத்தடுத்து பல்வேறு அமைப்பினர் வந்து புகார் மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக திமுகவைச் சேர்ந்த சண்முகையா உள்ளார். இவர் 2019 ல் நடைபெற்ற இடைத்தேர்தலில் திமுக சார்பில் ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து, திமுக தலைமை 2021 ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுத்தது. அதிலும் வெற்றி பெற்று தற்போது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினராக சண்முகையா இருந்து வருகிறார்.
இந்த நிலையில், சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே, பல நூறு ஆண்டுகள் பழமையான அம்மன் சிலையை வெளிநாட்டுக்கு கடத்த முயற்சித்த வழக்கில் , திமுக ஒன்றிய இளைஞரணி நிர்வாகி விக்னேஷ் என்ற விக்கி மற்றும் அவரது கூட்டாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த விக்னேஷ் என்பவர், ஓட்டப்பிடாரம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவுக்கு நெருக்கமானவர் என்றும், இந்தச் சிலை கடத்தலில், திமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் தொடர்பு இருப்பதாகவும் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

ஆனால், அவை திட்டமிட்டு பரப்பப்படும் உண்மைக்கு புறம்பான பொய்யான தகவல்கள் என்றும், இதனை வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அக்ரி பரமசிவன் மற்றும் அவருக்கு உறுதுணையாக ஓட்டப்பிடாரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா உள்ளிட்டோர் பரப்பி வருவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓரிரு தினங்களுக்கு முன்பு ஓட்டப்பிடாரம் தொகுதியைச் சேர்ந்த பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திரளாக வந்து புகார் மனு அளித்தனர்.

இந்த நிலையில், இன்று ( மே 21 ) மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் நிறுவனத்தலைவர் மாரியப்பபாண்டியன், தமிழர் விடுதலைக் களம் தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார், தமிழர் உரிமை மீட்புக் களம் தென்மண்டல அமைப்பு செயலாளர் கணேசன் பாண்டியன் மற்றும் ரவி தேவேந்திரன் உள்ளிட்டோர் தலைமையில் அந்தந்த அமைப்பைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என நூற்றுக்கணக்கானோர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு திரளாக வந்து புகார் மனு அளித்தனர்.

அந்த புகார் மனுவில், " ஓட்டப்பிடாரம் தொகுதி மக்களின் கல்வி பொருளாதாரம், வேலைவாய்ப்பு, வாழ்வாதார மேம்பாட்டிற்காக தொடர்ந்து பாடுபட்டு வருபவர் திமுகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் எம்.சி.சண்முகையா. அவரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், வேண்டுமென்றே திட்டமிட்டு, பொய்யான, உண்மைக்கு புறம்பான அவதூறு செய்திகளை வாட்ஸ்அப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அக்ரி பரமசிவன் மற்றும் அவருக்கு உறுதுணையாக ஓட்டப்பிடாரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இளையராஜா உள்ளிட்டோர் பரப்பி வருவதாகவும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவிற்கு ஆதரவாக தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அடுத்தடுத்து பல்வேறு அமைப்பினர் வந்து புகார் மனு கொடுத்த சம்பவத்தால் எஸ்பி அலுவலக வளாகம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது.




