மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டுமென்று என்ற நோக்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தொடங்கி வைத்தார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக்கூட்டரங்கில் இன்று (20.05.2025), பள்ளிக் கல்வித்துறை சார்பில் 2024-25 ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டுமென்று என்ற நோக்கில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்ததாவது:-

மாணவ, மாணவியர்களிடையே உயர்கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் மாணவர்களுக்கு உயர்கல்வி குறித்து உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டுமென்று என்ற நோக்கில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் "பெரிதினும் பெரிது கேள்” என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையினை இன்று தொடங்கியுள்ளோம்.
இக்கனவு கட்டுப்பாட்டு அறையில் 24க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணியில் இருப்பார்கள். இந்த கட்டுப்பாட்டு அறையின் அடிப்படை நோக்கம் என்னவென்றால், 2024-25ஆம் கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள அனைத்து மாணவர்களையும் மதிப்பெண்களுக்கு ஏற்றவாரு உயர்கல்வியில் சரியான பாடப்பிரிவில் சேர்வதை உறுதி செய்வது தான்.
அந்த மாணவர்கள் அனைவருக்கும் என்னென்ன விதமான படிப்புகள் உள்ளது, எவ்வளவு மதிப்பெண் பெற்றிருந்தால் எந்தெந்த மாதிரியான படிப்புகளில் சேரமுடியும். அதற்கு எந்தெந்த வழிகளிலெல்லாம் விண்ணப்பிக்க முடியும் என்ற முழுமையான விவரங்களையெல்லாம் பள்ளி தலைமையாசிரியர்கள், உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்கள் ஆகியோர்களுக்கு தெரிவித்து அந்த தகவல்களையெல்லாம் மாணவர்களுக்கு தெரியப்படுத்துவார்கள்.
மேலும், ஒவ்வொரு ஆசிரியர்களுக்கும் 25 பள்ளிகள் வீதம் பிரித்துக் கொடுக்கபட்டு உரிய உயர்கல்வி வழிகாட்டுதல்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளியில் இருக்கக்கூடிய மாணவர்களை தனித்தனியாக பேசுவதற்கும் கட்டுப்பாட்டு அறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நமது மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 206 பள்ளிகளிலிருந்து 2024-2025ஆம் கல்வியாண்டில் 19242 மாணவர்கள் தேர்வு எழுதியதில், 18509 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளார்கள். இவர்கள் அனைவரையும் உயிர்கல்வி வழிகாட்டுதலின்படி மாவட்ட அளவிலான கட்டுப்பாட்டு அறையின் மூலமாக வழிநடத்தவுள்ளோம்.
மேலும், பொதுத்தேர்வில் தோல்வியடைந்து இருக்கக்கூடிய மாணவர்களையும் அடுத்து நடைபெறும் தனித்தேர்வில் பங்கேற்க வைத்து, தேர்ச்சி பெற செய்து அவர்களையும் உயர்கல்வியில் சேர்க்கக்கூடிய முயற்சியிலும் கட்டுப்பாட்டு அறை ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள்.
அதுமட்டுமல்லாமல், தமிழ்நாடு பள்ளிகல்வித்துறையின் மூலம் இடைநிற்றல் ஆகி மீண்டும் பள்ளியில் சேர்ந்து பயின்றவர்கள், ஏழ்மை நிலையிலுள்ள மாணவர்கள், ஒரு பெற்றோர் அல்லது இரண்டு பெற்றோர்களையும் இழந்த மாணவர்கள் என்ற பல்வேறு தரவுகளின் அடிப்படையில் கண்டறியப்பட்டுள்ள 1408 மாணவர்களையும் தொடர்புகொண்டு அவர்களுக்கு உயர்கல்வியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்கள்.
எனவே, அவர்கள் அனைவரையும் உயர்கல்வி சேர்வதற்கான முயற்சியிலும் இந்த கட்டுப்பாட்டு அறையில் உள்ள ஆசிரியர்கள் ஈடுபடுவார்கள். இந்த கட்டுப்பாட்டு அறையானது இன்று முதல் தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கும். தொடர்ந்து, கல்லூரியில் விண்ணப்பிப்பது, நேர்காணலை எவ்வாறு எதிர்கொள்வது உள்ளிட்ட அனைத்து விதமான செயல்களிலும் கட்டுப்பாட்டு அறை ஆசிரியர்கள் உரிய வழிகாட்டுதல்களை வழங்க உறுதுணையாக இருப்பார்கள்.
மேலும், கட்டுப்பாட்டு அறையினை 93846 97546 மற்றும் 97888 59175 ஆகிய கைபேசி எண்களில் தொடர்புகொண்டு உயர்கல்வி குறித்து சந்தேகங்களைக் கேட்டறிந்து, உரிய ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

அதுமட்டுமல்லாமல் எந்தவொரு மாணவர்களும் உயர்கல்விக்கு விண்ணப்பிக்காமல் இருந்து விடக்கூடாது என்ற நோக்கில் ஒவ்வொரு பள்ளியிலும் மாணவர்களை கண்காணிப்பதற்கு 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் நியமனம் செய்யப்பட்டு நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் கணேஷ்மூர்த்தி உட்பட பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.




