தூத்துக்குடியில் வங்கி மேலாளரை தாக்கியதாக திமுக பகுதி செயலாளர் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தூத்துக்குடி முத்து கிருஷ்ணாபுரம் சேர்ந்தவர் ஜெயக்குமார் (55). இவர் போல்பேட்டை பகுதி திமுக செயலாளராக உள்ளார். இவர் தூத்துக்குடியில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் வீட்டு லோன் வாங்கி இருந்தாராம். அந்த லோனை சரிவர கட்டவில்லையாம். இதனையடுத்து வங்கி மேலாளராக பணிபுரியும் கர்நாடக மாநிலம் பெல்காம் பகுதியை சேர்ந்த வசந்த் மகன் பாரத் தேசாய் (45) மற்றும் வங்கி ஊழியர்கள் நேற்று அவருடைய வீட்டுக்கு சென்று லோன் கட்டும்படி கூறினார்களாம்.
இந்த நிலையில், மாலை சுமார் 6 மணி அளவில் வங்கிக்கு சென்ற ஜெயக்குமார் மற்றும் அவருடன் சென்ற சிலர் தனி அறையில் இருந்த வங்கி மேலாளரிடம் என் வீட்டுக்கு வந்து எப்படி பணம் கேட்கலாம் என்று தகராறு செய்து அருகில் இருந்த தீயணைப்பு கருவியை எடுத்து வங்கி மேலாளரை தாக்கினார்களாம். இதை பார்த்த வங்கி ஊழியர்கள் சத்தம் போடவே அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்களாம்.
இதில் காயமடைந்த வங்கி மேலாளர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மத்தியபாகம் காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து, வங்கி ஊழியர் அளித்த புகாரின் பேரில் திமுக பகுதி செயலாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




