தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் காலை குடிபோதையில் தள்ளாடி வந்த டாக்டர் ஒருவர் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். இது சம்பந்தமான பிரச்சினையில் நேற்று டாக்டர் கண்ணன் சஸ்பென்ட் செய்யப்பட்டார்.
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் புற நோயாளிகள் சிகிச்சை பெறுவதற்காக நோயாளிகள் வந்து காத்திருந்தனர். அப்போது ஆண்கள் மருத்துவப் பகுதியில் சிகிச்சை அளிக்கக்கூடிய பொது மருத்துவ பிரிவை சேர்ந்த கண்ணன் பணிக்கு வந்துள்ளார்.
அப்போது மது போதையில் இருந்த அவர், தள்ளாடியபடி புறநோயாளிகள் பிரிவிற்கு ஆண்கள் மருத்துவ பகுதிக்கு சிகிச்சை அளிப்பதற்காக செல்ல இருந்த அவர், திடீரென போதை தலைக்கேறிய நிலையில் கிரில் கேட்டை அடித்ததுடன், மற்றொரு கிரில் கேட்டையும் கையால் ஓங்கி அடித்ததாக நோயாளிகள் தெரிவித்தனர்.
பின்னர் நேராக புற நோயாளிகள் பிரிவில் ஆண்கள் மருத்துவ பகுதிக்கு சென்று சுமார் ஒன்றரை மணி நேரம் அவர் பணியில் இருந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். இந்த நிலையில் தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த சரோஜா என்ற பெண் இந்த சம்பவத்தை பார்த்து தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதுடன் இரு தொடர்பாக மருத்துவமனை மருத்துவர்களிடமும் புகார் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, பணியில் இருந்த டாக்டர் கண்ணனை அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, டாக்டர் ரமேஷ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தார். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில் டாக்டர் கண்ணனை சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குனர் நேற்று சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் தூத்துக்குடி அரசு மருத்துவமனை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



