தூத்துக்குடி மாவட்டம், வசவபுரத்தில் இருந்து சிங்கத்தாகுறிச்சி செல்லும் சாலையில் மத்திய நுண்ணறிவு பிரிவு ஏட்டு மாணிக்கராஜ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த பைக் ஒன்றை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
அந்த பைக்கில் 114 வெளிமாநில மது பாட்டில்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், அவர்கள் சிங்கத்தாகுறிச்சியை சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் ரமேஷ் ( 26 ), சுடலை மகன் தேவராஜ் ( 27 ) என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டதில், கூடுதல் விலைக்கு விற்பதற்காக வெளி மாநில மதுபாட்டில்களை இவர்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரில் வாங்கி ரயில் மூலம் நெல்லைக்கு கடத்தி வந்து, பின்னர் அங்கிருந்து பைக்கில் கொண்டு சென்று விற்க முயன்ற போது வாகன சோதனையில் சிக்கிக்கொண்டது தெரியவந்தது.
இதனையடுத்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், தூத்துக்குடி மதுவிலக்கு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.



