தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து தமிழக வெற்றிக் கழகத்தினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி ஸ்மாட் சிட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த நீர்மோர் பந்தலை இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் அகற்றியதைக் கண்டித்து அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னஸ் தலைமையில் த.வெ.கவினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அவ்வழியே வந்த மாநகராட்சி அதிகாரியின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், "காவல்துறை அனுமதியுடன் நீர்மோர் பந்தல் அமைக்கப்பட்டதாகவும், தவெக வளர்ச்சியை பொறுக்காமல் ஆளுங்கட்சி தூண்டுதலின் பேரில் நீர் மோர் பந்தலை அகற்றி விட்டதாகவும் குற்றம்சாட்டினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு மத்திய பாகம் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. இந்த திடீர் சாலை மறியல் போராட்ட சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரபரப்பு நிலவியது.




