• vilasalnews@gmail.com

திமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் உறுதி!

  • Share on

தமிழக சட்டசபை தேர்தல் களம் உச்சகட்டப் பரபரப்பை எட்டியுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் குறித்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது. இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொகுதிப் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட உள்ளார்.


தமிழகத்தில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் திமுக, அதிமுக, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி மற்றும் சசிகலா - ராமதாஸ் கூட்டணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது.


கடந்த பிப்ரவரி மாதம் திமுக கூட்டணியில் இணைந்த தேமுதிகவுக்கு ஏற்கனவே ஒரு மாநிலங்களவை சீட் வழங்கப்பட்டது. அதன் அடிப்படையில் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் எம்.பி-யாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், சட்டசபை தேர்தலில் தேமுதிகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஒப்பந்தம்  கையெழுத்தாகியுள்ளது.


தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கடந்த 26-ம் தேதி அளித்த விருப்பப் பட்டியலில் 20 தொகுதிகள் இடம் பெற்றிருந்தன. இதில் குறிப்பாக விருதுநகர் தொகுதியில் விஜயபிரபாகரன் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது. மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெற்றி பெற்ற கோட்டைகளான விருத்தாசலம் அல்லது ரிஷிவந்தியம் ஆகிய தொகுதிகளில் ஒன்றை தேர்வு செய்யத் பிரேமலதா விஜயகாந்த் திட்டமிட்டுள்ளார்.


இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் எல்.கே. சுதீஷ் தலைமையிலான தேமுதிக குழுவினர், திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவுடன் இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சுதீஷ், திமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் 10 தொகுதிகள் எவை என்பது சுமூகமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முறைப்படி தொகுதி விவரங்களை அறிவிப்பார் எனத் தெரிவித்தார்.


திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ், விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் மற்றும் தேமுதிக ஆகிய அனைத்துக் கட்சிகளுக்குமான தொகுதிப் பங்கீடு மற்றும் இடங்கள் ஒதுக்கும் பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது. இதன் மூலம் திமுக கூட்டணி தேர்தல் பிரசாரத்திற்கு முழுவீச்சில் தயாராகிவிட்டது.


கும்மிடிப்பூண்டி, விருகம்பாக்கம், பல்லாவரம், கே.வி.குப்பம் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, விருத்தாசலம், கடலூர், நெய்வேலி, சேலம் தெற்கு, சிங்காநல்லூர், கோவை வடக்கு, மதுரை மத்தி, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம், சாத்தூர், விருதுநகர், சிவகாசி ஆகிய தொகுதிகள் தேமுதிக தரப்பில் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  • Share on

அதிமுக ஆட்சிக்கு வந்தால் குடும்ப தலைவிகளுக்கு... எடப்பாடி பழனிசாமி தேர்தல் வாக்குறுதி!

சொந்த ஊரில் குடும்பத்துடன் வாக்களித்தார் எடப்பாடி பழனிசாமி!

  • Share on