“வரலாறு எங்களை எட்டப்பர்களாக அல்ல, கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவருக்கு பதிலளித்துள்ளார் தமிழ்நாடு முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு திமுக ஆதரவு அளித்துள்ள நிலையில், அதனை மறுபரிசீலனை செய்யக்கோரி இன்றைய தினம் சென்னை அண்ணா அறிவாலயத்துக்கு வருகின்றனர் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள்.
நாடாளுமன்றத்தில் திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா நாளை தாக்கலாக உள்ளது. இதையொட்டி, சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் எம்.பி.-க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய மு.க.ஸ்டாலின், 1971 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என திருத்தப்பட்ட மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், இது திமுகவுக்கு கிடைத்த வெற்றி என்றும் தெரிவித்தார்.
இந்த முடிவை மறுபரிசீலனை செய்யக்கோரி, காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக இன்று சென்னைக்கு படையெடுத்துள்ளனர். எந்தவித முன்னறிவிப்பும், திட்டமிடலும் இல்லாமல் தற்போது காங்கிரஸ் தலைவர்களின் இந்தப் பயணம் தொடங்கியுள்ளது. டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானம் மூலம் தற்போது சோனியா காந்தி மற்றும் கார்கே பயணித்து வருகின்றனர்.
இதுபற்றி தன்னுடைய தற்போதைய எக்ஸ்தளப் பதிவில் ராகுல் காந்தி கூறியிருப்பதாவது: “இந்தியா கூட்டணியின் மூத்த தலைவர்களும் நானும் சென்னை சென்று, சகோதரர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று சந்திக்கிறோம். தமிழ் விரோத சக்திகளுக்கு எதிராகச் சகோதரர் ஸ்டாலின் எப்போதும் பாறை போல உறுதியாக நின்றுள்ளார். தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும், அரசியலமைப்பைப் பாதுகாக்கவும் நாம் (திமுக-வும் காங்கிரஸும்) ஒன்றிணைந்து இந்த மசோதாவைத் தோற்கடிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்” என்றுள்ளார்.
இதற்கு பதிலளித்துள்ள திமுக தலைவரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், “அரசியலமைப்பையும் மாநிலங்களின் உரிமைகளையும் பாதுகாப்பதில் திமுகவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்களிப்பை அங்கீகரித்த சகோதரர் ராகுல் காந்தி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
தமிழ்நாட்டின் நலனையும், தமிழ் மக்களின் நலனையும் முதன்மையாகக் கருத்தில் கொண்டே நாங்கள் எப்போதும் ஒவ்வொரு முடிவையும் எடுத்துள்ளோம். இந்தப் பாதையில் நாங்கள் ஒருபோதும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம்; வரலாறு எங்களை எட்டப்பர்களாக அல்ல, கட்டபொம்மன்களாகவே மதிப்பிடும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.