• vilasalnews@gmail.com

தூத்துக்குடியில் பீதியைக் கிளப்பிய திடீர் சம்பவம்!

  • Share on

தூத்துக்குடி விமான நிலையம் மற்றும் அதன் அருகாமையில் உள்ள பகுதிகளில் நேற்று மாலை வீசிய அதிபயங்கர சுழல்காற்று பெரும் பொருட்சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. வானுக்கும் பூமிக்குமாகச் சுழன்று வந்த இந்த திடீர் சூறாவளியால் மக்கள் கடும் அச்சத்தில் உறைந்தனர்.


நேற்று பகல் முழுவதும் தூத்துக்குடியில் வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது. ஆனால் மாலையில் வானிலை திடீரென மாறி மேகமூட்டம் சூழ்ந்தது. மாலை சுமார் 4.45 மணியளவில் மறவன்மடம் முதல் வாகைகுளம் வரையிலான பகுதிகளில் மழையுடன் கூடிய மிகக் கடுமையான சுழல்காற்று வீசத் தொடங்கியது.


வானிலிருந்து ஒரு பெரிய குழாய் போல தரையைத் தொட்டபடி சுழன்று வந்த இந்த காற்று, செல்லும் வழியில் இருந்த மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்தது. வாகைகுளம் சுங்கச்சாவடி (டோல்கேட்) மீது மரம் ஒன்று தூக்கி வீசப்பட்டதால், அங்கிருந்த கட்டண மைய கேபின்கள், கணினிகள், கண்ணாடிகள் மற்றும் அலுவலகப் பொருட்கள் சுக்குநூறாக உடைந்தன. வாகனங்களை தணிக்கை செய்யும் ஸ்கேனிங் கருவிகள், இரும்பு தடுப்புகள் (Barricades) ஆகியவை காற்றில் பறந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கித் தப்பியோடினர். காற்றில் பறந்து வந்த தகரக் கூரைகள் மின்கம்பிகள் மீது விழுந்ததால் அப்பகுதி முழுவதும் மின்தடை ஏற்பட்டது.


இந்த கோரத் தாண்டவத்தில் தூத்துக்குடி விமான நிலைய வாகன நிறுத்துமிடத்தில் போடப்பட்டிருந்த பிரம்மாண்ட மேற்கூரைகள் காற்றில் தூக்கி வீசப்பட்டு, சுற்றுச்சுவரைத் தாண்டி வெளியே விழுந்தன.


விமான நிலையத்திற்கு அருகேயுள்ள தனியார் கேளிக்கை பூங்காவிலும் (தீம் பார்க்) சுழல்காற்று புகுந்து விளையாடியது. அங்குள்ள மேற்கூரைகள் பெயர்ந்து நீச்சல் குளத்தில் விழுந்ததில், அப்போது குளித்துக்கொண்டிருந்த 6 பேருக்கு காயம் ஏற்பட்டது. மேலும், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், மண் ஓடுகள் உள்ளிட்டவை பெருமளவில் சேதமடைந்தன.


சூறாவளியுடன் பெருமளவு புழுதியும் கிளம்பியதால், சுமார் 200 அடி தூரம் வரை சாலைகள் முற்றிலும் பார்வையிலிருந்து மறைந்தன. இதனால் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் பீதிக்கு ஆளாகி, வாகனங்களை ஓரங்களில் நிறுத்திவிட்டு தஞ்சம் அடைந்தனர். பலர் இந்த திக் திக் நிமிடங்களை தங்கள் செல்போன்களில் வீடியோவாகப் பதிவு செய்தனர்.


அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் தோன்றும் 'டொர்னாடோ' (Tornado) சுழல்காற்றைப் போல காட்சியளித்த இந்த அசாதாரண வானிலை நிகழ்வால் தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் நாசமாகியுள்ளன. சேத விவரங்கள் குறித்து வருவாய்த் துறையினரும், இந்த திடீர் சுழல்காற்று உருவானதற்கான காரணம் குறித்து வானிலை ஆய்வாளர்களும் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

  • Share on

கலந்தாய்வில் குளறுபடி : கொதிக்கும் தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள்!

sample

  • Share on