டாஸ்மாக் கடைகள் மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் இருப்பதால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகிறது என்றும், அதுபோன்ற கடைகளை வேறு இடங்களுக்கு மாற்றம் செய்ய வேண்டும் எனவும் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.
இதனையடுத்து தமிழ்நாடு புதிய முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டார். இந்த உத்தரவை 2 வாரங்களுக்குள் அமல்படுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தார். இதனையடுத்து, 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு வந்தன.
இதில், முதலமைச்சர் அறிவித்த 717 கடைகளின் பட்டியலில், தூத்துக்குடி மாவட்டத்தில் 63 கடைகள் அகற்றப்பட்டுள்ளன. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் அகற்றப்பட்ட 63 கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு வேறு மாற்று கடையில் பணிமாறுதல் செய்யப்படுவது தொடர்பாக, கலந்தாய்வு கூட்டமானது நேற்று ( 8.05.2026 ) தூத்துக்குடி மாவட்ட டாஸ்மாக் மேலாளர் தலைமையில் அவரது அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இதில், அகற்றப்பட்ட 63 கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதில், கலந்தாய்வானது வெளிப்படை தன்மையாகவும், நேர்மையாகவும் நடைபெறாமல், ஒரு தலை பட்சமாக நடந்ததாக டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில் குற்றச்சாட்டு எழுந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது 2003 ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பணி மூப்பு அடிப்படையில் கலந்தாய்வில் முன்னுரிமை தராமல், அதற்கு பின்பு சேர்ந்த ஊழியர்களுக்கு முன்னுரிமை தந்து, அவர்கள் கேட்கும் கடைகளை மாவட்ட மேலாளர் ஒதுக்கியதாகவும், அதற்காக பல பின்னணி காரணங்கள் இருப்பதாகவும், குறிப்பாக பணம் கையூட்டு பெற்றுக்கொண்டு நடந்திருப்பதாகவும் பாதிக்கப்பட்ட ஊழியர்கள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.
ஆகவே, 8.05.2026 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற பணிமாறுதல் தொடர்பான ஊழியர்கள் கலந்தாய்வு கூட்டத்தை ரத்து செய்துவிட்டு, பணி மூப்பு அடிப்படையில் முன்னுரிமை தந்தும், வெளிப்படை தன்மையாகவும், நேர்மையாகவும், பாரபட்சமின்றி கலந்தாய்வு கூட்டம் நடத்தி பணிகள் ஒதுக்கீடு செய்யவேண்டும் என்று பாதிக்கப்பட்ட டாஸ்மாக் ஊழியர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.