கடலோரத்து அறுபடை வீடான திருச்செந்தூரில், ஆண்டுதோறும் நடைபெறும் மாசித் திருவிழா இன்று பிப்ரவரி 21, சனிக்கிழமை வெகுவிமரிசையாகத் தொடங்கியது. பக்தர்களின் நீண்ட காத்திருப்புக்குப் பின், இன்று அதிகாலை வேத விற்பன்னர்களின் மந்திரங்கள் முழங்க திருக்கோயில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
திருவிழாவின் தொடக்கத்தை முன்னிட்டு நேற்று (வெள்ளிக்கிழமை) மாலையே யானை மீது கொடிப்பட்டம் வீதியுலா கொண்டு வரப்பட்டது. இன்று அதிகாலை 1 மணிக்கே நடை திறக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. காலை 5.05 மணி அளவில் கொடிமரத்தில் காப்பு கட்டிய பட்டர் கொடியேற்றினார். அப்போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" என எழுப்பிய பக்தி முழக்கம் கடற்கரை நகரத்தையே அதிரச் செய்தது.
பிப்ரவரி 25 (ஐந்தாம் திருநாள்), இரவு 7.30 மணிக்கு மேலக்கோயிலில் (சிவன் கோயில்) குடைவரைவாயில் தீபாராதனை. பிப்ரவரி 27 (ஏழாம் திருநாள்), அதிகாலை 'உருகு சட்டசேவை'. மாலை 4.30 மணிக்கு சண்முகப் பெருமான் சிவன் அம்சத்தில் சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளுவார். பிப்ரவரி 28 (எட்டாம் திருநாள்), காலை 5.00 மணி பிரம்மா அம்சத்தில் வெள்ளை சாத்தி கோலம். காலை 10.30 மணி, விஷ்ணு அம்சத்தில் பச்சை சாத்தி கோலம் (பச்சை கடைசல் சப்பரம்). மார்ச் 01 (ஒன்பதாம் திருநாள்), இரவு சுவாமி தங்கக் கைலாய பர்வத வாகனத்தில் வீதியுலா. மார்ச் 02 (பத்தாம் திருநாள்), விழாவின் உச்சகட்டமான மகா தேரோட்டம் காலை 7 மணிக்குத் தொடங்குகிறது. மார்ச் 03 (பதினொன்றாம் திருநாள்), இரவு கண்கவர் தெப்ப உற்சவம். மார்ச் 04 (பன்னிரண்டாம் திருநாள்), விழா நிறைவு.
விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கோயில் காவல் நிலைய ஆய்வாளர் கனகராஜன் தலைமையிலான போலீசார் மேற்கொண்டுள்ளனர். கோயில் தக்கார் அருள்முருகன் மற்றும் இணை ஆணையர் ராமு ஆகியோர் தலைமையிலான குழுவினர் பக்தர்களுக்கான வசதிகளைச் செய்துள்ளனர்.



