தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காடு பகுதியில் உள்ள உப்பளங்களை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு அங்கு, உப்பள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பெண்களிடம் நேரடியாக சந்தித்து, அவர்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
தூத்துக்குடி கடலோர பகுதிகளில் பாத்திகள் அமைத்து உப்பு உற்பத்தி தொழில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி புதிய துறைமுகத்தை ஒட்டி உள்ள முத்தையாபுரம், முள்ளக்காடு மற்றும் புல்லாவெளி, பழையகாயல் ஆகிய பகுதிகளில் உள்ள உப்பளங்களை கையகப்படுத்தி ரூ.30,000 கோடி முதலீட்டில் உலகத்தரம் வாய்ந்த இரண்டு கப்பல் கட்டும் தளங்கள் அமைக்கப்பட உள்ளது.
இந்த நிலையில், கப்பல் கட்டும் தளம் பணிகள் மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து உப்பளத் தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா உள்ளம் தேடி இல்லம் நாடி என்ற நிகழ்ச்சி மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக நேற்று விமானம் மூலம் தூத்துக்குடி வந்த அவர், இன்று ( ஜன.25 ) முள்ளக்காடு பகுதியில் உள்ள உப்பளங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, உப்பள உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் அப்பகுதி பெண்களிடம் நேரடியாக சந்தித்து, அவர்களின் பிரச்சனைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அது குறித்து அவர் கூறுகையில்:-
தூத்துக்குடியில் உள்ள உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் அமைக்கும் முயற்சி தொடர்ந்தால், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் போன்ற சூழ்நிலை உருவாகும் என்று எச்சரித்தார்.
மேலும், உப்பள தொழிலாளர்கள் மற்றும் உப்பு உற்பத்தியாளர்களின் பிரச்சனையை தமிழக முதல்வரின் கவனத்திற்கு நேரடியாக கொண்டு செல்வேன் என்றும் தெரிவித்தார்.



