தூத்துக்குடி ராஜாஜி பூங்காவில் காதல் ஜோடிகள் அத்துமீறுவதால் பொதுமக்கள் அருவெறுப்பில் உள்ளனர். இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெண்களுக்கான பிரத்யேகமான வகையில் பிங்க் பூங்கா உட்பட மொத்தம் 53 பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காக்களில் சறுக்கு விளையாட்டு ஊஞ்சல்கள், சீ-சா போன்ற குழந்தைகள் விளையாடுவதற்காகவும், பெரியவர்கள் இறகுபந்து உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடுவதற்கு தனியாக ஒரு பகுதிகள் ஒதுக்கப்பட்டும் அமைக்கப்படுள்ளன.
மேலும், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து பொழுது போக்கவும், பெரியவர்கள் நடை பயிற்சி மேற்கொள்ளவும், ஓய்வாக அமர்ந்து மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதற்கு வசதியாக இப்பூங்காக்களை பயன்படுத்தி வருகின்றன.
அந்த வகையில், தூத்துக்குடி மாநகரின் மைய பகுதியில் பாளையங்கோட்டை சாலையில் விஸ்தாரமான பரப்பளவில் ராஜாஜி பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்கா இன்னும் அகலப்படுத்தும் பணியும் நடைபெற உள்ளது. இங்கு நடை பாதை, சிறுவர்கள் விளையாட விதவிதமான விளையாட்டு சாதனங்கள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த ராஜாஜி பூங்காவில் சமீப காலமாக காதலர்கள் என்ற போர்வையில் சில ஜோடிகள் செய்யும் அட்டூழியம் எல்லை மீறி போகிறது.
இவர்கள், பொது இடம் என்று கூட பார்க்காமல், பார்ப்பவர்கள் கண் கூசி முகம் சுளிக்கும் அளவிற்கு அத்துமீறி அநாகரீகமான முறையில் சில்மிஷத்தில் ஈடுபடுகின்றனர். பொது இடங்களில் ஒழுக்கக்கேடான இதுபோன்ற செயல்கள் மூலம் அவர்கள் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.
காதலர்கள் என்ற போர்வையில் சில ஜோடிகள் சில்மிஷத்தில் ஈடுபட்டு எல்லை மீறும் சம்பவத்தால் ராஜாஜி பூங்காவிற்கு, சிறுவர்களை அழைத்து செல்லும் பொதுமக்கள் முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காதலர்களின் இந்த அட்டகாசத்தால், பொதுமக்கள் பெருமளவில் சிறுவர்களை பூங்காவிற்கு அழைத்து வருவதை தவிர்த்து வருகின்றனர்.
எனவே, பூங்காவில் அத்துமீறும் ஜோடிகளை தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



