தமிழகத்தில் குறிப்பாக தென்மாவட்டங்களில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் கடந்த ஒரிரு நாட்களாக கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனமழை காரணமாக பிற பகுதிகளில் இருந்து ஆற்றுப்பகுதிகளுக்கு வரும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் மருதூர் அணை, ஸ்ரீவைகுண்டம் அணையில் இருந்து தண்ணீர் வெளியேறி தாமிரபரணி ஆற்றில் சென்று கடலில் கலக்கிறது. கோரம்பள்ளம் கண்மாயில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
இதனால், ஆற்றில் இறங்கவோ கால்நடைகளை இறக்கவோ வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், ஆற்றின் கரையோரமுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு பகுதியில் நின்று மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில், மண் திட்டில் ஏறி தப்பினர். இருப்பினும், சுற்றி வெள்ளநீர் ஓடியதால் வெளியேற முடியாமல் தவித்த இளைஞர்களை தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்.




