தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதேபோல் இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. கிட்டத்தட்ட இரவில் மட்டும் 26 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
குறிப்பாக தென் மாவட்டங்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனிடையே இன்று ( 22.11.25 ) மாலை முதலே நெல்லை மற்றும் தூத்துக்குடியில் மழை பெய்ய தொடங்கியது. இதனால் ஆறு மற்றும் குளங்களில் நீர் வரத்து அதிகரிக்க தொடங்கியது.
தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்யும் கனமழையால் கோரம்பள்ளம் அணைக்கட்டிற்கு நீர்வரத்து வந்து கொண்டிருப்பதால், நீர் உப்பாத்து ஓடையில் திறந்து விடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஆறு, குளம், அணைக்கட்டு மற்றும் கோரம்பள்ளம் அணைக்கட்டு பகுதிகளில் அருகே வசிக்கும் பொதுமக்கள் ஆற்றில் குளிக்கவோ ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு செல்லாமலும் பாதுகாப்பாக இருக்கும் படியும், மாவட்டத்தின் மழைநீர் தேங்க கூடிய மற்ற தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களும் பாதுகாப்பாக இருக்கும் படியும், மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் எச்சரித்துள்ளார்.
அதே போல, இன்று ( 22.11.25 ) தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், ஸ்ரீவைகுண்டம் அணைகட்டினை பார்வையிட்டு அலுவலர்களை அணையின் நிலவரத்தை கண்காணிக்குமாறு அறிவுரைகள் வழங்கினார்.

மேலும், உப்பாறு ஓடை வழியாக கோரம்பள்ளம் அணைக்கட்டிற்கு நீர்வரத்து வந்து கொண்டிருப்பதை மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத், இன்று ( 22.11.25 ) புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலை பாலத்திலிருந்து பார்வையிட்டு தண்ணீரின் அளவை கண்காணிக்குமாறு அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.




