• vilasalnews@gmail.com

மடமடவென இடிந்து விழுந்தது... தூத்துக்குடியில் நடந்த பரிதாபம்!

  • Share on

தூத்துக்குடியில் வீட்டின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்ததில் 11 மாத பெண் குழந்தை உயிரிழந்த சம்பவம்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. படுகாயமடைந்த குழந்தையின் தாய், மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


தூத்துக்குடி சின்னகண்ணுபுரம் பகுதியில் உள்ள செல்வவிநாயகர்புரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆனந்த் - ராதா மகேஸ்வரி தம்பதி. ஆனந்த், வாடகை கார் ஓட்டுநராக வேலை செய்கிறாராம்.


இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகன் மற்றும் ஆதிரா என்ற 11 மாத கைக்குழந்தை உள்ளது. இந்தநிலையில், இவர்களின் எதிர்வீட்டில் குழந்தைக்கு பெயர் சூட்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றுள்ளது.


இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, ராதா மகேஸ்வரி தனது கைக்குழந்தை ஆதிராவுடன் எதிர் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்தநிலையில், பெயர் சூட்டுவிழா நடந்த வீட்டின் மேற்கூரை பூச்சு திடீரென பெயர்ந்து கீழே விழுந்துள்ளது.


இதில் தரையில் விளையாடி கொண்டிருந்த குழந்தை ஆதிரா மீது மேற்கூரை கற்கள் விழுந்ததில், குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. குழந்தையின் தாய் ராதா மகேஸ்வரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இறந்த குழந்தையை பார்த்து தந்தையும், உறவினர்களும் கதறி அழுத காட்சி காண்போரின் நெஞ்சை உறையச் செய்தது.


இதில், அதிர்ஷ்டவசமாக வீட்டில் இருந்த மற்ற சிலர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டு விஷேசத்திற்காக தாயுடன் சென்ற குழந்தை, மேற்கூரை இடிந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் ஆட்டம் காட்டப்போகும் மழை... வந்தது முக்கிய தகவல்!

ஸ்ரீசித்தர்பீட காலபைரவருக்கு தேய்பிறை அஷ்டமி வழிபாடு!

  • Share on