பெண்ணை வீடு புகுந்து தாக்கியதாக அளித்த புகாரின் பேரில் நடிகர் ஜி.பி.முத்து உட்பட 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்திவருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பெருமாள்புரம் கூளத்தெருவைச் சேர்ந்த முத்து மகேஷ். இவரது மனைவி பால அமுதா ( 45 ). கடந்த நவம்பர் 2ம் தேதி மாலை சுமார் 6:50 மணி அளவில் பெருமாள்புரம் தெருவில் முத்து மகேஷ் தனது பைக்கில் சென்ற போது, உடன்குடி பெருமாள் புரத்தைச் சேர்ந்த டிக்டாக், யூடியூப், சின்னத்திரை, பிக்பாஸ் மூலம் பிரபலமானவரும், தற்போது திரைப்படங்களில் நடித்து வருபவருமான நடிகர் உடன்குடி ஜி.பி.முத்துவின் மகன்கள் சைக்கிள்களில் இரு பக்கமும் சென்றுள்ளனர்.
இதற்கு ரோட்டின் இருபுறமும் ஏன் சைக்கிள் ஓட்டுகிறீர்கள்? ஒருபுறம் மட்டும் சைக்கிள் ஓட்டுங்கள் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவரது மகன்கள் நடிகர் ஜி.பி.முத்துவிடம் கூறியுள்ளனர். ஆத்திரமடைந்த ஜி.பி.முத்து, அவரது மனைவி அஜிதா, தம்பி இசக்கி முத்து மனைவி அனிதா, தந்தை கணேசன் ஆகிய நான்கு பேரும் முத்து மகேஷ் வீட்டுக்கு சென்று வாக்குவாதம் செய்ததாகவும் பால அமுதாவை நான்கு பேரும் சேர்ந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதில் தலை மற்றும் கை, வாயில் காயம் ஏற்பட்டு உடன்குடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து பால அமுதா கொடுத்த புகாரின் பேரில் குலசேகரப்பட்டினம் போலீசார் வழக்கு பதிவு செய்து நடிகர் ஜி.பி முத்து உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




