நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடத்திய மாணவர் சந்திப்பு குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் குறித்து பேசியதற்கு, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கு தூத்துக்குடி தமிழக வெற்றிக் கழக பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக்கழகம் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நாகரிகம் இன்றி பேசிய,தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் திரு.வேல்முருகன் அவர்களே..
பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பெண் தலைவர்களை கொள்கை தலைவர்களாகக் கொண்ட இந்தியாவின் ஒரே இயக்கம் எங்கள் தமிழக வெற்றிக் கழகம். பெண்களின் பாதுகாப்பில் தமிழக வெற்றிக் கழகம் என்றும் பாதுகாப்பு அரணாக இருக்கும் என்பதை கூட மாநாட்டில் பொதுவெளியிலேயே அறிவித்தவர் எங்கள் வெற்றித்தலைவர் தளபதியார் அவர்கள்.
எங்கள் வெற்றித் தலைவர் தளபதியார் அவர்களை இன்று தமிழகத்தில் ஒவ்வொரு பெண்களும் அண்ணனாய், தம்பியாய், தோழனாய்,நட்பாய், தங்கள் வீட்டில் ஒருவராய் தான் பார்த்து வருகிறார்கள் என்பதே நிதர்சனமான உண்மை. ஆனால், இதெல்லாம் ஒன்றும் புரிந்தும் புரியாமல், அறிந்தும் அறியாமல், பெண்குழந்தைகளை இழிவுப்படுத்தும் வகையில், பெண் குலத்திற்கே மிகுந்த அவமரியாதையை தாங்கள் ஏற்படுத்திவிட்டிர்கள்.
தங்களை உயர்த்திய தமிழ்மக்களையும் கூட தரக்குறைவான வார்த்தைகளால், தாங்கள் பேசியுள்ளதைக் கண்டு, பொதுமக்களும் கூட கடும் அதிருப்தியில் உள்ளனர்.
மேலும், எங்கள் வெற்றித் தளபதியார் அவர்களின் பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்த, சூழ்ச்சியாளர்களுடன் சேர்ந்து சூழ்ச்சி செய்ய நினைக்கும் உங்கள் தீய எண்ணங்கள் என்றும் ஈடேறாது. உங்கள் சூழ்ச்சி அரசியல்களைக் கண்டு, எங்கள் தமிழ்ச் சமுதாயம் பின் வாங்காது.
2026 சட்டமன்றத் தேர்தல் மூலம் ஆளும் ஆட்சியாளர்களின் முகத்திரையுடன், உங்களைப் போன்ற சூழ்ச்சியாளர்களின் முகத்திரையையும், எங்கள் தமிழ்ச் சொந்தங்கள் கிழித்தெறிந்து உங்களையெல்லாம் வீட்டிற்கு அனுப்பத் தயாராகிவிட்டார்கள் என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கின்றோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



