தூத்துக்குடியின் பிரதான சாலையின் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளான லாரியால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி அருகே கோரம்பள்ளத்தைச் சேர்ந்த ஸ்டீபன் பீட்டர் தேவராஜ் என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரி, தூத்துக்குடியில் இருந்து கோரம்பள்ளம் நோக்கி நேற்று சென்று கொண்டிருந்தது.
லாரியை முனியசாமி என்பவர் ஓட்டிச் சென்றார். இந்த லாரி தூத்துக்குடி பாளையங்கோட்டை சாலையில் எம்ஜிஆர் பூங்கா அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.
இதில் லாரி டிரைவர் முனியசாமி காயமடைந்தார். உடனடியாக அவர் மீட்கப்பட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர் சாலை தடுப்பில் மோதிய லாரியை தென்பாகம் போலீசார் மீட்டு அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



