• vilasalnews@gmail.com

பிள்ளைகள் ஆசைக்காக இதை அனுமதிக்காதீர்கள் : தூத்துக்குடி போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை!

  • Share on

விதிமீறல், குற்ற செயல்களை தடுக்க தீவிர வாகன தணிக்கைகளில் ஈடுபட்டுள்ள தூத்துக்குடி போலீசார், 18 வயது நிரம்பாத சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


தூத்துக்குடியில் போக்குவரத்து விதி மீறலை தடுக்கவும், குற்ற செயல்களை தடுக்கவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில், தூத்துக்குடி போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் மயிலேறும் பெருமாள் தலைமையிலான போக்குவரத்து போலீசார் சமீப காலமாக வாகன தணிக்கையை தீவிர படுத்தியுள்ளனர்.


செல்போன் பேசிக் கொண்டு இருசக்கர வாகனம் ஓட்டுதல், இருசக்கர வாகனத்தில் மூன்று பேர் பயணித்தல், வாகன பதிவு எண் இல்லாத வாகனங்களை ஓட்டுதல் போன்ற செயல்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கின்றனர். மேலும் 18 வயதுக்கு குறைவான சிறுவர்கள் இருசக்கர வாகனங்களை ஓட்டினால் அபராதம் விதிக்கப்படுவதுடன் பெற்றோர் மீதும் வழக்கு பதிவும் செய்யப்பட்டு வருகிறது.


அதன்படி, கடந்த 23ஆம் தேதி மாலை தூத்துக்குடி - திருச்செந்தூர் சாலையில் பெரியார் சிலை அருகே போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த 15 வயது சிறுவனை மடக்கிப்பிடித்து அபராதம் விதித்தனர். மேலும் சிறுவனின் தந்தை மீது 18 வயதிற்கு குறைவான சிறுவனை வாகனம் ஓட்ட அனுமதித்ததாக தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தூத்துக்குடியில் இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என போக்குவரத்து காவல்துறையினர் தெரிவித்தனர்.


மேலும், ஏற்கனவே கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு இது போன்று சிறுவனை பைக் ஓட்ட அனுமதித்ததாக அவரது தந்தை மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இதுபோன்று 18 வயது நிரம்பாத சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.


தங்களுடைய பிள்ளைகள் பைக் ஓட்ட ஆசைப்படுகிறார்கள் என்பதற்காக 18 வயது பூர்த்தி அடையாத தங்களது பிள்ளைகளுக்கு வாகனம் ஓட்ட சொல்லிக் கொடுத்து அதை அனுமதிப்பது பெற்றோர்களே தங்களது பிள்ளைகளை தவறு செய்ய தூண்டுவது போல ஆகும். அதற்காகத்தான் 18 வயது நிரம்பாத சிறுவர்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர்கள் மீதும் வழக்கு பதிவாகிறது. ஆகவே, தங்களுடைய பிள்ளைகள் பைக் ஓட்ட ஆசைப்படுகிறார்கள் என்பதற்காக பெற்றோர்கள் 18 வயது பூர்த்தி அடையாத தங்களது பிள்ளைகளை வாகனம் ஓட்ட அனுமதிக்காதீர்கள்.

  • Share on

தூத்துக்குடியில் அரசு பேருந்து மீது கல்வீச்சு!

ஊருக்குள் தெரியாதவர் நடமாட்டமா? யோசிக்க வேண்டாம் உடனே செய்து விடுங்கள்!

  • Share on