சென்னை மெரினாவில் உள்ள உழைப்பாளர் சிலை போல, தூத்துக்குடிக்குத் தங்கள் உழைப்பால் அடையாளத்தை உருவாக்கிய உப்பு தொழிலாளர்களுக்குச் சிலை அமைக்கப்பட்ட செயல் அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றுள்ளது.
மீன்பிடித்தல், சங்கு குளியல் ( ஆழ்கடல் முத்து எடுத்தல் ) மற்றும் உப்பு உற்பத்தி போன்ற கடல் வளங்களுடன் தொடர்புடைய தொழில்களே தூத்துக்குடியின் முக்கியமான தொழில் மற்றும் தூத்துக்குடியின் அடையாளம் ஆகும். முத்து எடுத்தலில் தனித்துவம் பெற்ற ஊராக தூத்துக்குடி இருப்பதால் இதற்கு முத்துநகர் என்ற பெயரும் உண்டு.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளது. இவற்றில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி உள்ளது.

இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்கள் உப்பு உற்பத்திக்கு உகந்த காலம் ஆகும். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும். கடல் நீரைப் பாத்திகளில் பாயச் செய்து காயவிடுவார்கள். கடல்நீர் வெய்யிலின் வெப்பம் காரணமாக நீராவியாகிவிடும். அடியில் உப்பு படிவுகளாகப் படிந்துவிடும். இந்த உப்புப் படிவுகளைக் கொண்ட பாத்திகள் உப்பளங்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது.
நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுக்கு சுவை சேர்க்கும் தொழிலாளர்களின் நிலை எவ்வளவு பரிதாபமானதாக இருக்கும் என்று என்றாவாது நாம் நினைத்திருப்போமா?

ஒரு பெண் ஒரு நாளைக்கு சராசரியாக 250 உப்பு சட்டிகளை சுமக்கிறார். ஒரு உப்புக் சட்டியின் எடை 20 முதல் 22 கிலோ வரை இருக்கும். ஆண், பெண் இருபாலருக்குமே கண் நோய், சிறுநீரக நோய், கால்களில் பொத்தல் விழுவது போன்ற உபாதைகள் ஏற்படுகின்றது.
அதுமட்டுமல்ல உப்பளத் தொழிலாளர்களுக்கு 6 மாதம் மட்டும்தான் வேலை இருக்கும். மழை காலத்தில் வேலை இருக்காது. இப்போதெல்லாம் காலநிலை மாற்றத்தால் பருவம் தவறி மழை பொழிகிறது. இதனால், இவர்களுக்கு இன்னும் நெருக்கடி அதிகமாகிறது. உப்பளத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை பணி காலத்தில் ஒரு நாள் மழை என்பது 5 நாள் அழிவுக்கு சமம். 5 நாள் மழை பெய்தால் பேரிடருக்குச் சமம். இப்படி பல்வேறு சொல்ல முடியாத இன்னல்களுக்கு மத்தியில் தங்களது வாழ்வை கடத்தும் தூத்துக்குடி மண்ணிற்கு தங்களது உழைப்பால் அடையாளத்தை தரும் உப்பளத் தொழிலாளர்களுக்கான கௌரவம் தூத்துக்குடி மண்ணில் எங்கேயேனும் கிடைத்துள்ளதா என்று தேடிப்பார்த்தால் இறுதியில் ஏமாற்றமே மிஞ்சும்.

இத்தகைய சூழலில் தான், தூத்துக்குடி கருப்பட்டி சொசைட்டி சாலை சந்திப்பு பகுதியில் ரூ.45 இலட்சம் மதிப்பீட்டில் தற்போது புதிதாகக் கட்டப்பட்டு திறக்கப்பட்ட ஆயிரம் பிறை பூங்கா முதியோர் மகிழ்விடத்தில் மூன்று உப்பளத் தொழிலாளர்கள் அளத்தில் கைகளில் வார் பலகைக் கொண்டு உப்பளப் பாத்தியில் வேலை பார்த்துக் கொண்டு இருப்பது போல் சிலை அமைக்கப்பட்டுள்ளது. செம்மண் நிறத்தில் புன்சிரிப்புடன் அமைக்கப்பட்டுள்ள இந்தச் சிலையை அப்பகுதியைக் கடந்து செல்லும் மக்களும் ஆர்வமுடன் பார்த்து ரசித்துச் செல்கின்றனர். இச்சிலை அமைந்துள்ள இந்த இடமானது, 1960 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரால் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட கருப்பட்டி கூட்டுறவு சங்கத்தின் தலைமை அலுவலகத்திற்கு இப்பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டது. பனை பொருட்களை சேகரித்து நியாயமான விலையில் விற்பனை செய்வதற்காக உருவாக்கப்பட்ட இச்சங்கம் இன்று வரை இப்பகுதியில் இயங்கி வருவதால் இப்பகுதி கருப்பட்டி சொசைட்டி என்று அழைக்கப்படுகிறது.
தூத்துக்குடி மண்ணின் மைந்தர்களான உப்பளத்தொழிலாளர்களை கௌரவப்படுத்தும் விதமாக இந்த சிலை அமைக்கப்பட்டாலும், அவை ஏதே தூத்துக்குடியில் ஒரு ஒரமான பகுதியில் அமைத்திருப்பது ஒரு தரப்பினருக்கு வருத்தத்தை தந்துள்ளது.

தூத்துக்குடி என்ற ஊரின் பெயரை கேட்டாலே அனைவருக்கும் சட்டென நினைவில் வருவது மீன்பிடித்தல், முத்துகுளித்தல், உப்பு உற்பத்தி இவை தான். இந்த தொழிலையும் இத்தொழிலில் ஈடுபடும் மக்களையும் கௌரவப்படுத்துவதே ஒவ்வொரு தூத்துக்குடிகாரர்களின் முதன்மையான கடமையாக இருக்க முடியும்.
அந்த வகையில், இவர்களை பெருமை படுத்தும் வகையில் தூத்துக்குடி ஊரின் நுழைவு பகுதிகள், பிரதான சாலையின் மையப்பகுதிகள், பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் கடற்கரை, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் மீன்பிடித்தல், முத்துகுளித்தல், உப்பள தொழில் ஆகியற்றில் ஈடுபடும் தொழிலாளர்கள் சிலைகளை வடிவமைத்து தூத்துக்குடியின் அடையாளமாக காட்சிப்படுத்த வேண்டும் என்பதே ஒவ்வொரு தூத்துக்குடி காரர்களின் விருப்பமாக உள்ளது.
ஆகவே, உலகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் சாலை மார்க்கமாக தூத்துக்குடி வழியே திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பல்லாயிரகணக்கானோர் செல்கின்ற போது, தூத்துக்குடி உப்பாற்று ஓடை அருகே திருச்செந்தூர் ரவுண்டான என்று சொல்லக்கூடிய பாலத்தை கடந்தே செல்கின்றனர். அங்கே தூத்துக்குடியின் அடையாளங்களான மீன்பிடித்தல், முத்துகுளித்தல், உப்பள தொழில் பணி செய்வது போன்ற தொழிலாளர்களின் சிலைகளை காட்சி படுத்த வேண்டும் என்று தூத்துக்குடியை நேசிக்கும் உள்ளூர் மக்கள் விரும்புகின்றனர்.

தூத்துக்குடியை வண்ண விளக்குகளாலும், ஊரின் அடையாளங்களை வைத்து அழகு படுத்த விரும்பும் மாநகராட்சி நிர்வாகம் இது போன்ற சொந்த ஊரின் அடையாளங்களையே சிலைகளாக அமைப்பதில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கையும் விடுக்கின்றனர்.




