தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் விரைவில் ஸ்மாா்ட் நூலகம், ஆக்கிரமிப்புகளை கையகப்படுத்தி பூங்காக்கள் மேம்படுத்துதல், மகளிருக்கு கூடுதலாக ஓர் புதிய பூங்கா அமைத்தல் என பல்வேறு புதிய தகவல்களை மேயா் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சி 34 ஆவது வாா்டுக்கு உட்பட்ட தேவகி நகரில் செயல்பட்டுவந்த ஊா்ப்புற நூலகக் கட்டடம் கடந்த 2023 ஆம் ஆண்டு பெய்த கனமழையால் சேதமடைந்தது. இதனை மக்கள் பங்களிப்போடு சீரமைக்க மாமன்ற உறுப்பினா் எஸ்.சந்திரபோஸ் முயற்சி மேற்கொண்டாா். அதையடுத்து பொதுமக்கள், புத்தக வாசிப்பாளர்கள், நூலக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து திரட்டப்பட்ட ரூ. 7.5 லட்சத்தில் நூலகக் கட்டடம் சீரமைக்கப்பட்டு மேஜைகள், கழிப்பறைக் கட்டடம், சுற்றுச்சுவா் வசதிகள் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ( 12.1.25) நடைபெற்ற புரனமைக்கப்பட்ட இந்த நூலக திறப்பு விழாவுக்கு மாமன்ற உறுப்பினா் சந்திரபோஸ் தலைமை வகித்தாா். மாவட்ட நூலக அலுவலா் மீனாட்சிசுந்தரம் முன்னிலை வகித்தாா். மேயா் ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று நூலகத்தைத் திறந்துவைத்துப் பாா்வையிட்டாா்.
பின்னர் மேயர் ஜெகன் பெரியசாமி விழாவில் பேசுகையில்:-
நூலகத்தை சீரமைக்க உதவியோரைப் பாராட்டுகிறேன். தூத்துக்குடி மாநகராட்சியில் 11 நூலகங்கள் உள்ளன. அவற்றை சரியான இடங்களில் மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நூலகம் அமைக்கப்பட வேண்டும் என்ற தமிழக முதல்வரின் உத்தரவு படி தூத்துக்குடி பழைய பஸ் ஸ்டாண்டில் நவீன நூலகம் விரைவில் திறக்கப்பட உள்ளது.
அதே போல, தூத்துக்குடி மாநகராட்சி எல்லைக்குட்ட பகுதிகளில் 206 பூங்காக்கள் உள்ளது. அதில் 42 ஆக்கிரமிப்பில் உள்ளது. அதை ஒவ்வொன்றாக மீட்டு பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
இவ்வாறான பூங்காக்கள் வெறும் பெயரளவிற்கு இல்லாமல், குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், இளைஞர்கள் விளையாடுவதற்கான கைப்பந்து, கூடைப்பந்து உள்ளிட களம் அமைத்தல், பெரியவர்களுக்கான நடைபயிற்சி பாதை என அனைத்து தரப்பினருக்கும் பயனுள்ள மற்றும் ஏற்ற வகையில் தான் பூங்காக்கள் அமைக்கப்படும். அமைக்கப்பட்டு வருகிறது.
மேலும், பெண்களுக்கு மட்டுமான பிரேத்யேகமாக பூங்கா அமைக்கப்பட்டு அவை நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஆகவே அதே போல பெண்களுக்கான மற்றொரு பூங்கா தூத்துக்குடி வடக்கு மண்டல பகுதியில் வர உள்ளது. இவ்வாறு மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.



