வாக்குப்பதிவு சதவீதம் அதிகரித்ததைக் கொண்டு குறிப்பிட்ட கட்சிகள் வெற்றியை முன்கூட்டியே கொண்டாடுவது அரசியல் மாயை என்றும், அது மக்களை தவறாக வழிநடத்தும் பிரசாரம் என்றும் கே. ஜெகதீஷ்வர ரெட்டி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சமீப தேர்தலுக்கு பிறகு சில தரப்புகள் உயர்ந்த வாக்குப்பதிவு சதவீதத்தை தங்களுக்கு சாதகமான அலை என சித்தரிப்பது உண்மையை மறைக்கும் முயற்சி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் விளக்கப்படி, வாக்குப்பதிவு சதவீத உயர்வுக்கு மக்கள் மனநிலை மட்டும் காரணமல்ல; வாக்காளர் பட்டியல் திருத்தங்கள், இறந்தோர் பெயர் நீக்கம், இரட்டை பதிவுகள் அகற்றம், இடம்பெயர்ந்தோர் விவர மாற்றம், புதிய இளைஞர் வாக்காளர்கள் சேர்ப்பு போன்ற காரணிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
வாக்காளர் எண்ணிக்கை குறைந்த பின் வாக்குப்பதிவு சதவீதம் உயர்ந்து தோன்றலாம்; அதனை அரசியல் அலை என காட்டுவது தவறான புரிதல்,என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நடந்த பட்டியல் மாற்றங்கள் இந்த முறை தேர்தல் சதவீத கணக்குகளில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வாக்குப்பதிவு சதவீதத்தை வைத்து வெற்றி தோல்வி குறித்து ஊகங்கள் பரப்புவது மட்டுமல்லாமல், அதனை நம்பி பந்தய கலாச்சாரம் உருவாகுவது ஆபத்தான போக்கு எனவும் எச்சரித்துள்ளார்.
உண்மையான தீர்ப்பு வாக்குப்பதிவு சதவீதத்தில் இல்லை; மக்களின் வாக்கு எண்ணிக்கையில்தான் இருக்கிறது. இறுதி முடிவை மக்கள் வாக்கே தீர்மானிக்கும், என்று ஜெகதீஷ்வர ரெட்டி தெரிவித்துள்ளார்.
தவறான அரசியல் கணிப்புகள் மற்றும் மாயப் பிரசாரங்களை நம்பாமல், அதிகாரப்பூர்வ தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும் என்றும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.