கேரளாவில் மூளையை பாதிக்கும் அமீபா தொற்று பரவி வருவதால், சபரிமலைக்கு வரும் பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது மூக்குக்குள் நீர் செல்லாமல் கவனிக்க வேண்டும் என கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடப்பு மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கான கோவில் நடை இன்று திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையைத் திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். இந்த மண்டல, மகர விளக்கு சீசன் ஜனவரி மாதம் 20ம் தேதி வரை 65 நாட்களுக்கு நடைபெறுகிறது.
இந்தச் சீசனை முன்னிட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து, இருமுடி கட்டி ஐயப்ப சுவாமியைத் தரிசனம் செய்வதற்காக வருகை தருவார்கள். அவ்வாறு வரும் பக்தர்களின் வசதிக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் தேவசம்போர்டு வாரியம் பல்வேறு முன்னேற்பாடுகளைச் செய்து வருகிறது.
இந்த ஆண்டு முதல் சபரிமலை சன்னிதானப் பகுதியில் கேமரா மற்றும் செல்போன்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சபரிமலைக்கு வரும் பக்தர்கள் 18ம் படிக்கு மேல் உள்ள சன்னிதானம் பகுதியில் செல்போன் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, சன்னிதானம் பகுதியில் செல்போன் பயன்படுத்துவதற்கும், புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதற்கும் அனுமதி இல்லை.
கேரளாவின் சில இடங்களில் 'அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ்' என்ற நோய் பரவி வருகிறது. இதன் காரணமாக, சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்களுக்காக சில வழிகாட்டுதல்கள் கேரள சுகாதாரத்துறை மூலம் வெளியிடப்பட்டுள்ளது. தேங்கிய நீரில் வாழும் அமீபாவால் மூளைக் காய்ச்சல் (Amoeba Brain Fever) ஏற்படும் அபாயம் உள்ளதால், ஐயப்ப பக்தர்கள் நீர்நிலைகளில் குளிக்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பம்பை ஆற்றில் நீராடும் பக்தர்கள் மூக்கை இரு விரல்களால் அடைத்தபடி நீராட வேண்டும் என்றும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
ஏற்கனவே இருக்கும் பிரச்னைகளுக்கான மருந்துகளை தொடர்ந்து சாப்பிட வேண்டும். மருத்துவ சிகிச்சையில் இருப்பவர்கள், அதற்கான ஆவணங்கள் மற்றும் மருந்துகளுடன் பயணிக்க வேண்டும். சபரிமலை யாத்திரைக்கு முன் நடைபயிற்சி போன்ற எளிதான உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மலை ஏறும் போது மெதுவாகவும் இடைவெளிவிட்டு ஏற வேண்டும். கொதிக்க வைத்த நீரையே குடிக்க வேண்டும். உணவு சாப்பிடும் முன் கைகளை கழுவ வேண்டும். அவசர மருத்துவ உதவிக்கு 04735 203232 என்ற எண்ணை தொடர்பு கொள்ள பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.



