ஓய்வு பெறுவதற்கு 3 நாட்களுக்கு முன் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முதல்வரும், செயலாளருமான டாக்டர் எம்.தவமணி கிறிஸ்டோபர், மே 29ஆம் தேதி கல்லூரி கல்வி இயக்குநரகத்தால் பணியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
மதுரையில் மிகவும் பழமையான மற்றும் பிரபலமான கல்லூரியாக அமெரிக்கன் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியின் செயலராகவும், முதல்வராகவும் தவமணி கிறிஸ்டோபர் பதவி வகித்து வந்தார். மேலும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத் துணை வேந்தராகப் பணியாற்றிய ஜ.குமார் தனது பதவியை ராஜினாமா செய்த போது, இந்தப் பல்கலைக் கழகத்தின் அலுவல் பணிகளைக் கண்காணிக்க ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது.
இந்தக் குழுவில் தவமணி கிறிஸ்டோபரும் உறுப்பினராகச் செயல்பட்டு வந்தார். இவர் மீது வருவானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்ததாகவும், முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இதுதொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் நிலுவையில் உள்ளது.
இதன் காரணமாக, மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழுவிலிருந்து தவமணி கிறிஸ்டோபர் விடுவிக்கப்பட்டார். ஆனாலும் அமெரிக்கன் கல்லூரியின் முதல்வராக அவர் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்.
இந்த நிலையில், மே 31 அன்று அமெரிக்கன் கல்லூரி முதல்வர் பதவியில் இருந்து தவமணி கிறிஸ்டோபர் ஓய்வு பெறும் நிலையில், மே 29 அன்று தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குநரகம் அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து, கல்லூரியின் மூத்த பேராசிரியர் டாக்டர் கண்ணபிரான், மே 30 முதல் புதிய முதல்வராக (பொறுப்பு) பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.



