• vilasalnews@gmail.com

திமுக மீது நேரடியாக தாக்கு.. ஆன்மீக அரசியல் அஸ்திரத்துடன் களம் இறங்கும் புதிய பாஜக தேசிய தலைவர் நிதின் நபின்!

  • Share on

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக நிதின் நபின் இன்று முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். தலைவர் பதவியை ஏற்ற கையோடு, தமிழக அரசியல் களம் குறித்து அவர் ஆற்றிய உரை, இந்திய அரசியலில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.


பாஜகவின் செயல் தலைவராகப் பணியாற்றி வந்த நிதின் நபின், அக்கட்சியின் உட்கட்சித் தேர்தலில் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் முன்னாள் தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் முன்னிலையில் அவர் இன்று பொறுப்புகளை ஏற்றுக்கொண்டார். இது பாஜகவின் அடுத்தகட்டப் பயணத்திற்கான ஒரு முக்கிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.


தனது உரையில் தமிழகத்தின் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை நேரடியாகச் சாடினார் நிதின் நபின். குறிப்பாக, தமிழகத்தின் கலாச்சார அடையாளங்களுடன் தொடர்புடைய விவகாரங்களை அவர் முன்வைத்தார்.


 "திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதைத் தடுத்தவர்கள் யார் என்பதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்" எனக் குறிப்பிட்ட அவர், இது ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல, ஒரு தொடர் நிகழ்வு என்று சாடினார்.


"ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் இந்திய அரசியலில் இடமில்லாத நிலையை நாம் உருவாக்க வேண்டும்" என்று  சூளுரைத்தார்.


தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு எதிராகச் செயல்படும் சக்திகளை ஜனநாயக ரீதியாக எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார்.


அடுத்த சில மாதங்களில் தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது.  தொண்டர்களின் உழைப்பால் ஐந்து மாநிலங்களிலும் தாமரை மலரும் என நம்பிக்கை தெரிவித்தார்.


நிதின் நபினின் இந்தப் பேச்சு, வரவிருக்கும் தேர்தல்களில் பாஜக வெறும் வளர்ச்சி அரசியலை மட்டும் பேசாமல், ஆன்மீக உரிமையையும் முதன்மை பிரச்சாரக் கருவியாக மாற்றப்போகிறது என்பதைக் கோடிட்டுக் காட்டுகிறது. குறிப்பாக தமிழகத்தில் திமுகவின் சித்தாந்தங்களுக்கு எதிராக ஒரு வலுவான கலாச்சார எதிர்ப்பை  உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளது தெளிவாகிறது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

  • Share on

"சிந்தூர்" எதை அழிக்க நினைத்தனரோ அதே பெயரில்... பதிலடியை தொடங்கியது இந்தியா!

வரிசையில் நிற்கத் தேவையில்லை.. விடுமுறை பயமும் இல்லை... ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு ஒரு மெகா ஜாக்பாட்!

  • Share on