பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் தீவிரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி வருகிறது.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி, சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில், அப்பாவி 26 மக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதற்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.
அதன்படி, நள்ளிரவு முதல் இந்திய ராணுவம், "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பாகிஸ்தான் நாட்டுக்குள் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது. ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளின் 9 முகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
பஹல்காம் தாக்குதலுக்கு கொடுக்கப்படும் இந்த பதிலடியை பல்வேறு தரப்பினரும் வரவேற்று வருகின்றனர். பொது மக்களின் வலிகளை உணர்ந்து பதிலடி கொடுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய ராணுவத்துக்கு சல்யூட். அவர்களுக்கு எங்களின் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம். பாகிஸ்தானில் வேரூன்றியுள்ள தீவிரவாதத்தை அழிப்பதற்காக நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதலை மனதார வரவேற்கிறோம் என்கின்றனர் தேச பற்றாளர்கள்.



