தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு நேற்று (ஏப்ரல் 23) அமைதியான முறையில் நடந்து முடிந்தது. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVM), பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.

தூத்துக்குடி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள வ.உ.சி அரசு பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையமாக மாற்றப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்களும் இங்குள்ள தனித்தனி பாதுகாப்பு அறைகளில் (Strong Rooms) வைக்கப்பட்டுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்யும் வகையில், தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான விஷு மகாஜன் இன்று (24.04.2026) நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறைகளின் சீல் மற்றும் பாதுகாப்புத் தன்மை, CCTV கேமராக்களின் செயல்பாடு மற்றும் கட்டுப்பாட்டு அறை, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், இயந்திரங்களைப் பெறும் இடங்களில் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் குறித்தும் அவர் கேட்டறிந்தார்.