தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நேற்று நடந்து முடிந்த நிலையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் வாக்கு ரகசியத்தை மீறும் வகையில் சமூக வலைதளங்களில் வெளியான வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

வாக்குச்சாவடி மையங்களுக்குள் செல்போன் கொண்டு செல்ல தேர்தல் ஆணையம் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்நிலையில், தூத்துக்குடியில் பெண் வாக்காளர் ஒருவர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் (EVM) தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.

அந்த வீடியோவில், தமிழக வெற்றிக் கழக (த.வெ.க) வேட்பாளர் ஸ்ரீநாத்தின் விசில் சின்னத்திற்கு வாக்களிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், அந்த வீடியோவில் பின்னணி இசையாக பிரபல சினிமா வசனமான "ஜெயிச்சிடுவேல்லா சாமி, ஊரே உனக்காக வேண்டுது சாமி" என்ற வரிகள் சேர்க்கப்பட்டு, சமூக வலைதளங்களில் குறிப்பாக த.வெ.க-வினரின் வாட்ஸ்-அப் குழுக்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகிறது.

இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி, தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை வெளிப்படுத்துவது அல்லது அதனைப் புகைப்படம், வீடியோ எடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி இது வாக்கு ரகசியத்தை மீறும் செயலாகக் கருதப்படுகிறது.

வாக்குச்சாவடிக்குள் நுழைவதற்கு முன்பாக வாக்காளர்கள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர். அப்படியிருக்கையில், அந்தப் பெண் செல்போனை உள்ளே கொண்டு சென்றது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.