தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் தேர்தல் களத்தில் தூத்துக்குடி தொகுதியே பெரும் பரபரப்பாக காணப்படுவதாக அரசியல் பார்வையாளர்களால் சொல்லப்படுகிறது.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியானது, இந்தியாவின் முக்கியத் துறைமுகங்களில் ஒன்றான வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தையும் உள்ளடக்கியதோடு, பல்வேறு தொழிற்சாலைகள், அனல்மின் நிலையங்கள், உப்பளங்கள் நிறைந்துள்ள பகுதியாகும்.

சென்னை, கோவைக்கு அடுத்தபடியாக வளர்ந்து வரும் தொழில் நகரமாகவும் திகழும் தூத்துக்குடியில், மீன் பிடித்தல், ஏற்றுமதி, இறக்குமதி  ஆகியவையும் பிரதானத் தொழிலாக உள்ளது. சாலை, விமானம், ரயில், கப்பல் ஆகிய நான்கு வகை போக்குவரத்து வசதிகளையும் பெற்ற தொகுதியாகும்.

இத்தொகுதியில் தேர்தல் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் சக்தியாக இந்து நாடார், கிறிஸ்தவ நாடார், மீனவர்கள் உள்ளனர். அடுத்தப்படியாக முஸ்லீம்கள், ஆதி திராவிடர்கள், வேளாளர்கள் ஆகியோரும் இருக்கின்றனர்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் வேட்பாளராக களம் காண்கிறார். 2016, 2021 ஆகிய இரண்டு தேர்தல்களில் தொடர் வெற்றியை பெற்ற கீதா ஜீவன் மூன்றாவது முறையாக ஹாட்ரிக் வெற்றியை பெறுவதற்காக தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவருகிறார். அவரின் வேகம் திமுகவினருக்கும் புத்துணர்ச்சியை தருவதால் திமுகவினரும் களத்தில் வேகமாக சூழன்று வருகின்றனர்.

அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சரும், வர்த்தக அணி மாநிலச் செயலாளரும், தூத்துக்குடி மாநகரச் செயலாளருமான சி.த.செல்லப்பாண்டியன் போட்டியிடுகிறார். அதிமுக சார்பில் 2011 ல் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையிலும் இடம் பெற்றார். 2016 தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு தோல்வியை தழுவினார்.

2021 தேர்தலில் சி.த.செல்லப்பாண்டியனுக்கு போட்டியிட வாய்ப்பு வழங்கப்படாத சூழலில், 2026 தேர்தலில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தன்னை நம்பி தனக்கு வாய்ப்பு கொடுத்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கைக்கு தன்னுடைய வெற்றியை காணிக்கையாக்க வேண்டும் என்ற முனைப்போடு தேர்தல் பணிகளில் வேகம் காட்ட, அவரோடு சேர்ந்து அக்கட்சியினரும் தீவிர களப்பணியில் இறங்கியுள்ளனர்.

இது போக தமிழக வெற்றிக்கழகம் சார்பில் நடிகர் ஸ்ரீநாத்தும், நாம் தமிழர் கட்சி சார்பில் ஜேக்கப் தேவதாஸ் அபிஷேக் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். ஆனால், தூத்துக்குடி தொகுதியை பொறுத்தவரையில் திமுக வேட்பாளர் கீதாஜீவன் மற்றும் அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் ஆகிய இருவருக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

திமுக வேட்பாளர் கீதா ஜீவன் மற்றும் அதிமுக வேட்பாளர் சி.த.செல்ல பாண்டியன் ஆகியோர் 2011 மற்றும் 2016 ஆகிய இரண்டு தேர்தல்களில் இரண்டு முறை தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் நேரடியாக மோதியுள்ளனர். இதில் 2011 தேர்தலில் சி.த.செல்லப்பாண்டியனும், 2016ல் கீதா ஜீவனும் என இருவரும் தலா ஒரு முறை வென்றுள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவரும் 3 வது முறையாக நேரடியாக இத்தேர்தலில் மோதுகின்றனர். இதனால் இத்தேர்தலில் இவர்தான் கட்டாயம் வெற்றி பெறுவார் என்று கணிக்கும் அளவிற்கு சூழல் இல்லாமல் இருப்பதாலும்,  வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயம் இருவருக்கும் கௌரவ பிரச்சனையாக பார்க்கப்படுவதால், இவர்கள் இருவருக்கும் இடையேயான போட்டி கடுமையாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கீதா ஜீவன் 62,817 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியன் 89,010 வாக்குகள் பெற்று, 26,193 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அதே போல, 2016 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட சி.த.செல்லப்பாண்டியன் 67,137 வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் கீதாஜீவன் 88,045 வாக்குகள் பெற்று, 20,908 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

கடந்த கால கீதா ஜீவன் Vs சி.த.செல்லப்பாண்டியன் இடையேயான தேர்தல் போட்டியில் பெற்ற வாக்குகளை கணக்கிடும் போது, இருவரும் தலா ஒரு முறை வெற்றி பெற்று சரிசமமாக இருந்தாலும், கீதா ஜீவனை விட சி.த.செல்லப்பாண்டியனே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். அதாவது கீதா ஜீவன் பெற்ற வாக்கு வித்தியாசத்தை விட,  சி.த.செல்லப்பாண்டியன் கூடுதலாக 5285 வாக்குகள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிட தக்கது.

அசுர வேகத்தில் களத்தில் திமுக வேட்பாளர் கீதா ஜீவன் இருந்தாலும், அதிமுக வேட்பாளர் சி.த.செல்லப்பாண்டியனை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல என்பது தான் தூத்துக்குடி தொகுதி தேர்தல் களத்தின் ஆரம்ப கட்ட கள நிலவரம்.